BREAKING NEWS

யோகிபாபுவின் ‘முருகன்’ வேடத்துக்கு எதிர்ப்பு

பி ஜி மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. கதையின் நாயகனாக யோகிபாபு, நடிக்க மற்றும் ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். புது இயக்குனர் முருகன் இயக்குகிறார்.
இவர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த “காக்டெய்ல்” என்கிற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடிக்கிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் நடிகர் யோகிபாபு முருகன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பார்த்துவிட்டு சில இந்து அமைப்புகள் படத்தில் ‘‘முருகனை தவறாக சித்தரித்துள்ளதாகவும் இது தங்களது மத உணர்வை புண்படுத்துவதாக அமைந்துள்ளது‘‘ என்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து ‘‘காக்டெய்ல் ‘‘படத்தின் இயக்குநர் முருகன் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது ;
” யாரின் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் கதையும் சரி, இந்த போஸ்டரும் சரி உருவாக்கப்படவில்லை.. உள்நோக்கத்துடன் இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை.
முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திரு விழாக்களில் முருகர் வேடமிடுகிறோம். சிவன் வேடம் அணிகிறோம்.
மாறுவேடப் போட்டிகளில், தமிழர் கலை சார்ந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வேடங்கள் அணிகிறோம்…
எம் முருகப் பெருமானை வேடமிட்டு ஆராதிப்பது தமிழக மக்களின் வாடிக்கை தானே..?
அதையே சினிமாவில் காட்டும்போது மட்டும் எப்படி தவறாகி விடும்..?
இது ஒரு மதுவை மையப்படுத்திய படமும் அல்ல.காக்டெய்ல் என்கிற டைட்டில் கூட ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு காக்டெய்ல் என்கிற கிளியை மையப்படுத்தியே வைக்கப்பட்டுள்ளதே தவிர வேறு எந்த தவறான காரணமும் இல்லை. அதனால்தான் இந்த போஸ்டரில் முருகனின் வாகனமான மயிலை பயன்படுத்துவதற்குப் பதிலாக அந்த காக்டெய்ல் என்கிற கிளியை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம்”
இவ்வாறு இயக்குனர் முருகன் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *