படம் தயாரிப்பது ஏன்? – பா.ரஞ்சித்

ரஜினி நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். இவர் படம் இயக்குவதோடு தனது நீலம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் படங்களையும் தயாரித்து வருகிறார்..
இப்பட நிறுவனம் சார்பில் ‘‘பரியேறும் பெருமாள்‘ படத்தை தயாரித்தவர், அடுத்து ‘‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு‘‘ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.அதியன் ஆதிரை இயக்கி இருந்த இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது.
இப்படத்தின் நன்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், கணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பா. ரஞ்சித் பேசுகையில் கூறியதாவது:-
‘படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும். நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரென் ஆப் ஹெவன்” போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள் தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவுசெய்யத் தூண்டியது.
நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது.
அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
ரஜினி சாரை படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாததுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன். சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விசயத்தை ஈசியாக கடத்த முடியும் என்றால் அது சினிமாவில் தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும்”
இவ்வாறு ரஞ்சித் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *