BREAKING NEWS

விமர்சனத்தை கண்டு அஞ்ச மாட்டோம்- அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை  பைக்காரா  திருவள்ளுவர்  நகரில் ரூ.40 லட்சம்  செலவில் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை அமைச்சர் செல்லூர்ராஜூ தலைமை யில் இன்று நடந்தது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் ரூ.25 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 100-வது வார்டான திருவள்ளுவர் நகரில் ரூ.40 லட்சம் செலவில் சாலை போடப்படுகிறது. இந்த பணி 45 நாட்களுக்குள் முடிவடையும்.

மதுரை  நகரில்  பெரியார்  பஸ்  நிலையத்தில் அடுக்கு மாடியுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்று அழகுப்படுத்தும் பணி, வைகை கரையில் பூங்கா அமைக்கும் பணி, காளவாசல் மேம்பால பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை நகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.1290 கோடி மதிப்பிலான முதற்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 2-வது கட்ட பணிக்கான பூமிபூஜை விரைவில் நடைபெறும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் திட்டப்பணிகளை பாராட்ட மனதில்லாமல் குறைகளை கூறி வருகின்றனர்.

எங்களை பொருத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் தான் நீதிமான்கள். அவர்கள் வாக்களித்தால்தான் பதவியில் இருக்க முடியும்.

எனவே எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அவர்களது விமர்சனத்துக்கு பயப்பட மாட்டோம். மக்கள் பாராட்டுகிறார்கள். இதுவே இந்த அரசுக்கு கிடைத்த நற்சான்று ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *