BREAKING NEWS

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டு வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி நாளை தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்- மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு
கடுமையாக உழைத்து, நேர்மையாகத் தேர்வெழுதினால் போதும், அரசு வேலை நிச்சயம் என்ற நிலையே இதுநாள்வரை இருந்து வந்தது. ஆனால் தேர்வுகளில் முறைகேடு, தகுதியற்ற நபர்களை உறுப்பினர்களாக நியமிப்பது போன்ற நடவடிக்கைகளால் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மீது விண்ணப்பதாரர்கள் வைத்திருந்த நம்பிக்கை கலையத் தொடங்கியது.
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்று முதல் 100 இடங்களைப் பிடித்தவர்களில் பெரும்பாலானோர் ராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்று தெரியவந்தது. இதற்கு முன்பு நடந்த குரூப் 2-ஏ தேர்விலும் இதே மையத்தில் தேர்வெழுதியவர்களே முதல் 55 இடங்களில் 37 இடங்களைக் கைப்பற்றியிருந்தனர். இந்த முறைகேடுகள் குறித்த போலீஸ் விசாரணையில், இரண்டு தேர்வுகளிலும் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குள் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள பலரை போலீசார் தேடியும் வருகின்றனர்.
உண்மை வெளிவராது
இந்தத் தேர்வுகளில் உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் துணையில்லாமல், அதுவும் தேர்வாணையம், தலைமைச்செயலகம், தேர்வு மையங்கள், போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் எனப் பல தரப்புகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பேயில்லை. இந்தவழக்கில் இதுநாள்வரை கைதாகியுள்ளவர்கள் அனைவரும் கடைநிலை ஊழியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய முதலைகளைத் தப்பிக்க வைக்கும் வேலைகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இறங்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இவைதவிர, முந்தைய தேர்வுகள் பலவற்றிலும் அதுவும் குறிப்பாக இதற்கு முன் நடந்த குரூப் 1-ன் முதன்மைத் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் மிகப்பெரிய மோசடி நடந்ததாக தகவல் வெளியாளது. ஆணையத்தில் தொடர்ந்து நடந்து வரும் முறைகேடுகளை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் உண்மை வெளியே வராது.
கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ போலீசார் விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசாரின் விசாரணைக்கு மாற்றக்கோரியும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்யக்கோரியும் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நாளை (04-02-2020, செவ்வாய்க்கிழமை) காலை சரியாக 9 மணிக்குச் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பு “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *