BREAKING NEWS

ஆசியாவிலேயே முதலீடை ஈர்க்கும் மாநிலம தமிழகம்… முதல்வர் பெருமிதம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே சியேட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஸ்ரீபெரும்புத்தூர் கண்ணன் தாங்கல் பகுதியில் “சியேட் டயர்” தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 

சியேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் தான் தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் அனைத்து திட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பதை நான் பெருமையுடன் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன். பல்வேறு காரணங்களால் இயக்கப்படாமல் நின்ற நிறுவனங்கள் கூட, அம்மா அரசின் சிறப்பான செயல்படுகளால் புத்துயிர் பெறும் சூழல் உருவாகி இன்றைக்கு திறக்கப்பட்டு வருகின்றன. சியேட் டயர் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தற்போது டயர் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றான சிந்தடிக் ரப்பரை மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் தமிழ்நாட்டில் உருவாவதன் மூலம், டயர் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் குறைவான விலையில் இங்கேயே கிடைக்கக்கூடிய நல்ல சூழல் உருவாகும். இதனால், உற்பத்தி செலவு குறைவதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் சக்திகளில் ஒரு மாநிலம் என்று சொன்னால், தமிழ்நாடு தான்.

சியேட் நிறுவனம், தனது உற்பத்தி தொழிற்சாலையை துவங்கியதைப் போல, விரைவில் தனது ஆராய்ச்சி பிரிவையும் சென்னையில் துவங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியிலே நான் ஆனந்த் கோயங்காவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இன்று உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கின்றது என்றும், நாள் ஒன்றுக்கு 30,000 கார் டயர் உற்பத்தி செய்யப்படும் என்றும் சொன்னார்.

அதோடு, இங்கு பணிபுரிகின்றவர்களில் 40 சதவீதம் பெண்கள் என்ற செய்தியையும் சொன்னார், உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்தத் தொழிற்சாலைக்குத் தேவையான தண்ணீர் கொண்டு வருவதற்கான உதவியை செய்ய வேண்டுமென்று இங்கே மேடையில் என்னை கேட்டுக்கொண்டார். அரசு அதற்கு அனைத்து உதவிகளையும் செய்யும்.

இவ்வாறு அவர் பேசினார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *