மாநில தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டது உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:-
எந்த தவறும்
நடைபெறவில்லை
உள்ளாட்சித் தேர்தல் சரியான முறையிலே நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை சொன்னார். நான் உண்மையாக சொல்லுகிறேன், எந்த இடத்திலும், எந்த தவறும் நடைபெறவில்லை. அரசு ஊழியர்கள் தான் இந்த வாக்குகளை எண்ணினார்கள். அப்படி என்றால் அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா? ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வாக்குகளை எண்ணினார்கள்.
காலை 8 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை 10 மணி வரை நின்று கொண்டே வாக்குகளை எண்ணினார்கள். தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். அத்தனை முகவர்களுமே, தடுப்பு அமைக்கப்பட்டு, வெளியே நின்று தான் பார்க்கிறார்கள். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. சுயேட்சையாக இருந்தாலும் சரி. ஆகவே, இதில் எந்த தவறும் நடைபெறவில்லை.
நேர்மையாக
செயல்பட்டனர்
என்னுடைய தொகுதியிலே, நங்கவள்ளி ஒன்றியத்திலே 2 ஒன்றிய கவுன்சிலர், ஒருவர் 11 வாக்குகளிலே தோல்வியுற்றார், மற்றொருவர் 17 வாக்குகள் வித்தியாசத்திலே தோல்வியுற்றார். அதற்கு மறுவாக்கு எண்ணிக்கை கூட எண்ணப்படவில்லை. இரண்டு பேரும் மனு கொடுத்தனர், பிறகு கூட எண்ணப்படவில்லை. எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், இதில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு எல்லாம் ஒரு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதால் தான் இதை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும், தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டு இருக்கிறது. அந்த தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் நேர்மையோடும், நீதியோடும், தர்மத்தோடும், நடுநிலையோடும் செயல்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் சுமார் 450 சுயேட்சைகள் இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று சொன்னால் அது சாதாரண விஷயம் இல்லை. அவர்கள் எந்த கட்சியும் சேராதவர்கள்.
சிறப்பான செயல்பாடு
ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது. உங்கள் கூட்டணிக் கட்சியிலே இடம் பெற்றவர் கிடையாது, எங்கள் கூட்டணி கட்சியிலே இடம் பெற்றவர் கிடையாது. ஆகவே, எந்த பின்பலமும் இல்லாத சுயேட்சை வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால், இந்த தேர்தல், தேர்தல் ஆணையம் மூலமாக எவ்வளவு சிறப்பாக, நடுநிலையோடு நடைபெற்று இருக்கிறது.
ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களை பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க. கூட்டணி 43.73 சதவிகிதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. தி.மு.க. கூட்டணி 45.32 சதவிகிதம் பெற்றிருக்கிறது. நீங்கள் 1.59 சதவிகிதம் வாக்குகள் தான் வித்தியாசமாக இருக்கிறீர்கள். அதேபோல மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 39.60 சதவிகிதம் வாக்குகள் அ.தி.மு.க. கூட்டணி பெற்றிருக்கிறது. தி.மு.க. கூட்டணி 40.35 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறது. 0.75 சதவிகிதகம் தான் நீங்கள் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *