BREAKING NEWS

தேர்தல்… கொண்டு வருமா… மாறுதலை..?!

வருகிற வியாழன்… அதாவது 12.12.2019-ம் தேதி இங்கிலாந்தின் அரசியல் களத்தில் ஒரு மாற்றம் நிகழவிருக்கிறது. ஆம் இங்கிலாந்து தனது வரலாற்றில் 57-வது பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. 1923-ம் ஆண்டுக்கு பின்னால் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் தேர்தல் இதுவேயாகும். டிசம்பர் மாதம் என்பது இங்கிலாந்தின் மிகவும் பரபரப்பான மாதமாகும். டிசம்பர் 25, அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை நோக்கியே மக்களின் எதிர்பார்ப்புகள் இருக்கின்றது. அப்பண்டிகையை ஒட்டி வரும் விடுமுறைத்தினங்களை நோக்கிய இங்கிலாந்து மக்களின் ஆயத்தங்கள் அமோகமாக நிறைவேற்றப்படும் மாதமாகும். மலிவு விற்பனைகள் அமோகமாக அறிவிக்கப்படும் மாதம். அனைத்து மக்கள் மனங்களிலும் அடுத்தவரை நோக்கிய பார்வையில் ஒருவித கனிவும், நட்பும், பரஸ்பர புரிந்துணர்வும் முன்னிற்கும் ஒரு வேளை. ஆனால், நடைபெறவிருக்கும் தேர்தலினால் இவ்வருட டிசம்பர் மாதத்தில் நாட்டின் மக்களிடையே பிளவுகள் ஏற்படுமோ என்கிற ஐயம் மேலோங்குகிறது.

ஜாடியில் அடைக்கப்பட்ட ஒரு பூதத்தைத் திறந்து விட்டுவிட்டு அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஒரு நிலையிலேயே இங்கிலாந்து இன்று தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வுக்கான சர்வஜன வாக்கெடுப்பின் தாக்கம் கடந்த மூன்றரை வருடங்களாக நாட்டினையே பிளவு படுத்தி வைத்திருக்கின்றது என்பது உண்மையாகிறது.

இதுவரை காலமும் ஐனநாயகத்தின் வரைவிலக்கணமாகத் திகழ்ந்த இங்கிலாந்து அரசியல் மேடை இன்று ஒரு சங்கடமான சுழலுக்குள் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. “ எனது கருத்தை எதிர்ப்பதற்கான உனது உரிமையை நான் பாதுகாப்பேன்” எனும் வகையில் இயங்கிக் கொண்டிருந்த இங்கிலாந்தின் அரசியல் நாகரிகம் இன்று அவசர கட்டத்தை எட்டியிருப்பது போலவே தென்படுகிறது. இது லண்டனின் தன்னலமற்ற அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.

ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவான அணியும் , பிரெக்ஸிட்டுக்கு எதிரான அணியும் எனும் வகையில் நாடு இன்று பிளவுபட்டு அணிவகுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இந்த ப்ரெக்ஸிட் எனும் துருப்புச் சீட்டை வைத்து பிரதமராகிய பொரிஸ் ஜான்சன் அவர்கள் இந்தப் பொதுத்தேர்தலை நடத்த முன்வந்திருக்கிறார்.

பொதுத்தேர்தல் நடத்தப்பட்டாலன்றி நாட்டின் நிலையைச் சீராக்க முடியாது என்கிற நிலையை எட்டி விட்டது என்பது ஓரளவு உண்மையே. ப்ரெக்ஸிட்டுக்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு வாக்களித்த தொகையில் 52% பேர் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பது உண்மையே. அவர்களின் ஜனநாயக வெளிப்பாட்டினை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டதினால் பாராளுமன்றம் மூடப்பட்டதும் உண்மையே. இதற்குக் காரணம், அரசமைத்து இருந்த கன்சர்வேடிவ் கட்சி அரசு ஒரு சிறுபான்மை அரசாக இருந்ததாகும். வட அயர்லாந்துக் கட்சியான டீ.யூ.பி எனும் கட்சியின் அரசுக்கு வெளியிலான தார்மீக ஆதரவின் அடிப்படையினால்தான் அவர்களது அரசு இயங்கிக் கொண்டிருந்தது.

ப்ரெக்ஸிட்டுக்கு எதிரான அரசைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்த அரசினால் ப்ரெக்ஸிட் சம்பந்தமான எந்த முன்மொழிதலையும் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. நாம் தெரிவு செய்தனுப்பிய பாராளுமன்ற அங்கத்தினர்கள்தானே எமது ஐனநாயக கோரிக்கையை நிறைவேற்றுவதுதானே அவர்களது கடமை என்பது ப்ரெக்ஸிட்டுக்கு ஆதரவான மக்களின் கோஷம்.

அது எப்படி முடியும் ? 48% மான நாம் ப்ரெக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்திருக்கிறோமே! எனவே, எங்களது அபிலாஷையை யார் நிறைவேற்றுவது? ஆகவே, பாராளுமன்ற உறுப்பினர்களின் முட்டுக்கட்டைகள் சரியானதே என்கிறார்கள் ப்ரெக்ஸிட்டுக்கு எதிரானவர்கள். சரி பாராளுமன்றத்தில் இந்த முட்டுக்கட்டைகளை போடும் உறுப்பினர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? பெரும்பான்மை மக்களின் அபிலாஷை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எனும் ப்ரெக்ஸிட் தான் என்றாலும் அவ்வெளியேற்றம் எப்படிப்பட்டதாக அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்குள் பேதமை இருக்கிறதே !

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவிதமான உடன்படிக்கையுமின்றி , இப்போதுள்ள பொதுச்சந்தையின் அனுகூலங்களை விட்டு எவ்வித வர்த்தக உடன்படிக்கையுமின்றி வெளியேறுவது ஐக்கிய இராஜ்ஜியத்தின் பொருளாதாரத்தைப் பொறுத்தவகையில் தற்கொலைக்குச் சமமானது. எனவே, மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை , ப்ரெக்ஸிட்டை நிறைவேற்றலாம் ஆனால் அதற்குரிய தகுந்த உடன்படிக்கையுடன் மட்டுமே. அதுவரை பாராளுமன்ற ஜனநாயகக் கோட்பாடுகள் அமைய நாம் ப்ரெக்ஸிட்டை தடுப்போம் என்று வாதிடுகிறார்கள்.

இத்தனை இக்கட்டுக்களுக்கும் மத்தியில் இப்போது நாம் பொதுத்தேர்தல் எனும் சந்தியில் நிற்கிறோம். இந்தப் பொதுத்தேர்தலின் மூலம் தான் மக்கள் நாம் அடுத்துச் செல்லப்போகும் வழியைத் தெரிவு செய்யப்போகிறார்கள். அவ்வகையில் இப்பொதுத்தேர்தல் ஐக்கிய இராஜ்ஜியத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமானதொன்று.

சரி இனி இந்தப் பொதுத்தேர்தலின் நிலைப்பாட்டைப் பார்ப்போம்..

இந்தப் பொதுத்தேர்தலின் முடிவினை நிர்ணயிக்கப் போகும் அன்றி இதிலே தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் கட்சிகள் ஒரு ஐந்து என்பதுதான் உண்மை. அவை, கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி, ப்ரெக்ஸிட் கட்சி, ஸ்கொட்லாந்து தேசிய முன்னணிக் கட்சி ஆகியவையாகும்.

இவை தவிர, வேறு சில உதிரிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. ஆயினும் கடந்தகால தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிற்கும் இரு கட்சிகளும் ஏறக்குறைய ஒரு தொங்கு பாராளுமன்ற நிலையை அடைந்தாலொழிய இந்த உதிரிக் கட்சிகளின் முடிவுகள் தாக்கத்தைக் கொடுப்பதற்கு சாத்தியமில்லை.

இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றில் கூட்டாட்சி அரசாங்கம் என்பது இரண்டு அல்லது மூன்றுமுறையே இடம்பெற்றிருக்கிறது.

ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வு மட்டும்தானா இந்தப் பொதுத்தேர்தலின் நோக்கம்? தெரிவு செய்யப்படும் அரசாங்கம் ஐந்துவருட கால ஆயுள் கொண்டது, ப்ரெக்ஸிட் எனும் நிகழ்வினைத் தவிர்த்து இன்றைய ஐக்கிய இராஜ்ஜிய மக்களின் வாழ்க்கை பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன. அவைகளில் சில,

வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கையின் அதிகரிப்பு, வைத்தியர்கள், தாதிகள், வைத்தியசாலைகள் மற்றும் சுகாதாரச் சேவையாளர்களின் பற்றாக்குறை,   நாட்டின் குற்றச்செயல்கள் அதிகரிப்பு, காவல் துறை பணியாளர்களின் பற்றாக்குறை, நாட்டின் கல்வித் தராதரப் பாதிப்பு, நாட்டின் போக்குவரத்துத்துறையில் ஏற்படும் மக்கள் நெருக்கடி, புகையிராத சேவையில் சீர்கேடு போன்றவையாகும்.

நான் மேலே குறிப்பிட்டவை சிலவே , இப்பிரச்சனைகளுக்கான முடிவை யார் சரியான முறையில் கையாளப் போகிறார்கள் என்பது இந்தத் தேர்தலில் நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியம். ஆயினும் ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வு மட்டும் இந்தத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்குமேயானால் அது எவ்வகையிலான ஒரு தீர்வை மக்களுக்கு அளிக்கப் போகிறது என்பதும் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றே.

அனைத்துக் கட்சிகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், காலநிலைச் சீர்கேட்டைத் தடுப்பதற்கான தடவடிக்கைகளையும் முக்கிய திட்டங்களாக அறிவித்திருக்கின்றன. ஓ க்ரீன்ஸ் எனும் உதிரிக் கட்சி இந்தச் சுற்றுச்சூழல் பாதுகாப்பையே தமது பிரதான கொள்கையாக முன்வைத்து தேர்தல் களத்தில் குதித்துள்ளார்கள்.

எந்தத் தேர்தலிலும் இல்லாதவாறு இம்முறை ஐக்கிய இராஜ்ஜியத் தேர்தலில் பல இனவிரோதக் கோஷங்கள் தலை தூக்கியிருக்கின்றன.. இதற்கு முக்கியக் காரணம் ப்ரெக்ஸிட்டினால் விளைந்த பிளவுகளே எனக் கருதப்படுகின்றது. அரசியல்வாதிகள் தேர்தல் வெற்றியொன்றையே முன்னிலைப்படுத்தி பல நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதால் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்ட மக்களின் கோபம் வெளிநாட்டவர் மீதும், சிறுபான்மையினர் மீதும் திரும்புகிறது என்பது பண்பட்ட அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

நடக்கும் என்பார் நடக்காது ! நடக்காது என்பார் நடந்து விடும் !

டிசம்பர் 13 அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

 

 

 

 

பிரிக்ஸிட் (Britian Exit):

ஆங்கிலத்தில் Brexit. (Britian Exit) அதாவது பிரிட்டன் வெளியேறுதல் என்று பொருள். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான விஷயமாதலால், இப்பதம் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம்:

பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்காக இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏற்படுத்தப்பட்டதுதான் ஐரோப்பிய ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, க்ரோஷியா, சிப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், ஃபின்லாந்து, ஃப்ரான்ஸ், க்ரீஸ், ஜெர்மனி, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கென்று, `ஈரோ’ என்ற தனி பணம் உள்ளது. இதனை 19 நாடுகள் பயன்படுத்துகின்றன. இதற்கென்று நாடாளுமன்றமும் உள்ளது.

ஏன் ஐரோப்பியா ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறே வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததற்கு முதன்மையான காரணம் குடியேற்றம்தான். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்த பலநாடுகள் குடியேற்ற விஷயத்தில் தாராளவாதப் போக்குடன் நடந்து கொண்டது. பல நாடுகளிலிருந்து வருவோர் பிரிட்டனில் குடியேறுவது காரணமாக, தங்கள் நாட்டின் கலாசாரம், பொருளாதாரம் மோசமடைவதாக பிரிட்டன் மக்கள் கருதத் தொடங்கினர். இந்த எண்ணம், இது தொடர்பாக ஒரு வாக்கெடுப்புக்கு வித்திட்டது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடந்த அந்த வாக்கெடுப்பில் 71.8 % பேர் கலந்து கொண்டனர். 51.9 % மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

– சக்தி சக்திதாசன், லண்டன்

, தொடர்புக்கு: ssakthi@btinternet.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *