BREAKING NEWS

‘‘அரசியல் சாசன வரலாற்றின் இருண்டநாள்..!’’ ~ முனைவர் ஜெ.ஹாஜாகனி

காந்தி தேசத்தைக் கோட்சே தேசமாக்கும் கொடிய திட்டத்தோடு செயல்பட்டு வரும் மத்திய  பா.ஜ.க அரசு, குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை 9.12.2019 அன்று மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றியுள்ளது. பெரும்பான்மை வாதத்தின் மூலம் ஜனநாயகத்தை வீழ்த்த நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு மக்களவையில் இருக்கின்ற பெரும்பான்மை, நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களை ஒடுக்கி ஆள உதவுகிறது என்றால் மிகையல்ல.

இந்த மசோதா பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட ஆதரவு கட்சிகள் அனைத்தும் சேர்ந்து 311 வாக்குகள் பெற்று மக்களவையில் நிறைவேறியுள்ளது. 80 வாக்குகள் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராகப் பதிவாகியுள்ளது. மாநிலங்களையில் 125 வாக்குகள் ஆதரவாகவும் 99 வாக்குகள் மசோதாவுக்கு எதிராகவும் பதிவாகியுள்ளன.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆவேசத்தோடும், அறிவுப்பூர்வமாகவும் எழுப்பிய வினாக்களுக்கு, ஆளும் பா.ஜ.க தரப்பு பதில்கூற முடியாமல் விழிபிதுங்கி நின்றது. அரசியல் சாசன வரலாற்றில் இது ஓர் இருண்டநாள் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி. நாடாளுமன்றத்தின் முகத்தில் விழுந்த அறை என்றும் இது வங்கக்கடலில் கிழித்து வீசப்பட வேண்டிய மசோதா எனவும் வர்ணித்துள்ளார்  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

குடியுரிமைக்கு மதத்தை ஓர் அடிப்படையாக்கும் அருவருப்பான செயலை மத்திய பா.ஜ.க அரசு அரங்கேற்றியுள்ளதோடு, தமிழ் மக்கள் மீதான தனது வஞ்சத்தையும் தீர்த்துள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வசித்துவரும் ஈழத்தமிழ் மக்களுக்கு குடியுரிமை தரமுடியாது என்ற கொடுமையான நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ள மோடி அரசு, அவர்களை சட்ட விரோதக் குடியேறிகள் என்றும் இழிவுபடுத்தியுள்ளது.

குடியுரிமை மசோதாவின் முன்னோடியான தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) என்பது நிகழப்போகும் ஒரு பயங்கரத்தின் முன்னோட்டம் என்பதை நாம் பலமுறை எச்சரித்துள்ளோம். அது, இந்தியாவின் முகத்தையே சிதைக்கின்ற முயற்சி என்பதையும் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் மூலம் பா.ஜ.க வெளிப்படுத்தும் வன்மம் எவ்வளவு கொடுமையானது என்பதற்குச் சான்றாக குடிமக்கள் பதிவேட்டிலிருந்து அது நீக்கியுள்ள முஸ்லிம் ஆளுமைகளின் பட்டியல் உள்ளது.

கார்கில் போரில் சிறப்பாக பாகிஸ்தானை எதிர்த்துப் போரிட்டவரும், ராணுவப் பணிக்குப் பிறகு காவல்துறையில் பணியாற்றியவருமான இனாயத்துல்லா என்பவரையும் “நீ இந்தியனே அல்ல” என்று நீக்கியுள்ளது இப்பதிவேடு. முன்னாள் குடியரசுத்தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதின் குடும்பத்தினரும் இப்பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் ஆலோசனைப்படி பா.ஜ.க அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் நாம் அறிந்த இந்தியாவை அழித்துவிடக் கூடிய பேரிடி ஆயுதம் என்று விமர்சித்துள்ளார் புகழ்பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான ஹர்ஷ் மந்தர். குடியுரிமை மசோதா நிறைவேறினால் தன்னை முஸ்லிமாக அறிவித்துக்கொள்ளப்போவதாகவும் ஹர்ஷ்மந்தர் கூறியிருக்கிறார்.

சர்வதேச சமயச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆணையம்  (United States Commission on International Religious Freedom (USCIRF) இந்தியாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) மதச் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கான ஆயுதமாக பா.ஜ.க அரசால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மதச் சுதந்திரம் நாளுக்கு நாள் நசிவுற்று வருவதை இது வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளதாக  The Wire இணையதளம் வெளியிட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் எடுக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் தரவுகள் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்தன. 19 லட்சம் பேர் சட்டவிரோதக் குடியேறிகள் என அறியப்பட்டதில் 12 லட்சம் முஸ்லிமல்லாதவர் என்ற உண்மை அதிர்ச்சிகரமாக  வெளிப்பட்டது. அதிகமாகக் குடிபெயர்ந்து இந்தியாவுக்குள் பங்களாதேஷ் முஸ்லிம்கள் நுழைந்து விட்டதாக பா.ஜ.க பரிவாரம் பரப்பி வந்தது பொய் என்பது இதன்மூலம் அம்பலமானது.

இதனால் பா.ஜ.கவின் என்.ஆர்.சி. திட்டத்திற்கு எதிராக அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி அதன் அஸ்ஸாம் மாநிலத் தலைவர்களும் போர்க்கொடி தூக்கினர். சங்பரிவார சார்பு அமைப்புகளே தேசியக் குடிமக்கள் பதிவேட்டைக் கொளுத்தும் போராட்டங்களை நடத்தின.

குவஹாட்டியில் கடந்த ஆகஸ்ட் 31, 2019 அன்று ஹிந்து யுவஷத்ர பரிஷத் என்ற அமைப்பு தேசிய குடிமக்கள் பதிவேட்டை தீ வைத்துக் கொள்ளும் போராட்டத்தை பகிரங்கமாகவே நடத்தியது. இதைத் தொடர்ந்து,  சட்டவிரோதக் குடியேறிகளாய் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் அஞ்சவேண்டாம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இந்த அருவருப்பான அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பிய போதும் பா.ஜ.க அதுகுறித்து கூச்சப்படவே இல்லை.  இப்போது 9.12.2019 அன்று மக்களவையில் கடும் அமளிக்கிடையே நிறைவேறியுள்ள குடியுரிமை திருத்த சட்டம், 1955-ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தில் பல அபாயகரமான மாறுதல்களைச் செய்து இந்தியாவின் தன்மையையே சீரழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

1949 காலங்களில் இந்திய அரசமைப்புச்சட்டம் உருவான வேளையில் இந்தியா, பாகிஸ்தான் இடையில் கோபத்தீ கொழுந்துவிட்டெரிந்தது. ஆயினும் இந்திய அரசமைப்புச்சட்டம் 5, 6 பிரிவுகள்பாகிஸ்தானிலிருந்து வருவோர்க்கு குடியுரிமையை மறுக்கவில்லை. இந்தியக்குடியுரிமைக்கு மதத்தை ஓர் அடிப்படை ஆக்கவில்லை.

ஆனால், மத்திய பா.ஜ.க அரசு குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக்குகிறது. பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் ஆகியோர் 5 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் தங்கியிருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் (முஸ்லிம்களுக்கு வழங்கப்படாது) என்கிறது இச்சட்டம்.

பர்மா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வரும் மக்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாதாம். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இதுகுறித்து எழுத்துப்பூர்வமாக அரசிடம் வினா எழுப்பியுள்ளார். “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? வழங்கப்படும் எனில் விவரம்… வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறுக…” என்று வினா தொடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்யானந்தா ராய், “இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009-ன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5-ன்படி, பதிவு செய்துகொண்ட அயல் நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமைப் பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6-ன் படி இயல்புரிமை (Naturalisation) அடிப்படையில் குடியுரிமைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இருவிதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது” என்று பதிலளித்துள்ளார்.

இதன்மூலம் மோடி அரசு, ஈழத் தமிழர்களை “சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்” என்று இழிவுபடுத்தியுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 14, 15 ஆகியவை மக்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றன. சாதி, மதம், மொழி, இனம் என எந்த ஒன்றின் அடிப்படையிலும் குடிமக்களிடம் அரசு பேதம் காட்டக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சாசனம்.

அரசியல் சட்டத்தின் ஆன்மாவையே அழிக்கும் வகையிலும், இந்தியாவின் மதச்சார்பற்றத் தன்மையை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை. 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்து குடியேறியதைப்போலவே ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலும் அகதிகளாகக் குடியேறினர். ஆனால், அந்த நாடுகளில் குடியேறிய அவர்கள் சுமார் பத்துப்பதினைந்து ஆண்டுகளிலேயே அந்நாட்டின் குடிமக்களாக உரிமை பெற்றுவிட்டனர். ஆனால், இலங்கைக்குப் பக்கத்திலேயே உள்ள தங்களது தொப்புள்கொடி உறவான தமிழகத்தை உள்ளடக்கிய நாடான இந்தியாவில் மட்டும் 30 ஆண்டுகளைக் கடந்தும் குடியுரிமை மறுக்கப்படும் கொடுமை என்பது ஆற்றுப்படுத்த இயலாத பேரதிர்ச்சி.

இலங்கையில் பல இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றாலும் பெரும்பாலோர் மதத்தால் இந்துக்களே. ஆனாலும் மத்திய பா.ஜ.க அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது ஈவிரக்கம் காட்ட மறுக்கிறது. கோத்தபயாவை அழைத்துக் கொஞ்சி மகிழ்கிறது.

மதத்தால் இந்துவாக இருந்தாலும், இனத்தால் தமிழர்களாக இருந்தால் பழிவாங்குவதுதான் பா.ஜ.க-வின் தலையாயக் கொள்கை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.  குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது இந்திய தேசத்தின் இதயத்தில் செருகப்பட்ட கொள்ளி. எட்டுத் திக்கும் எதிரொலிக்கும் போராட்டங்களால் அதிரப் போகிறது டெல்லி.

‘‘முஸ்லிம்களை எந்தவொரு அரசும் பதற்றத்திற்கு உள்ளாக்கி, கிளர்ச்சியில் இறங்கத் தூண்டாது. அப்படிச் செய்தால், அது ஒரு பைத்தியக்கார அரசாகவே இருக்க முடியும்’’ என்றார் அரசியல் சாசன சிற்பி டாக்டர் அம்பேத்கர்.

மத்திய அரசு வெறி முற்றிய நிலையில் வீற்றிருக்கிறது.  காந்திதேசம் கோட்சேவின் தேசமாக முற்றிலும் மாறுவதற்குள் மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.

 

 

 

 

 

 

– முனைவர் ஜெ.ஹாஜாகனி,

தொடர்புக்கு: haja76@gmail.com
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *