BREAKING NEWS

கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ரூ. 1.80 லட்சம் கோடிக்கு அன்னிய முதலீடு சேர்ப்பு

சென்னை தரமணியில் டிட்கோ , டிஎல்ப் நிறுவனங்கள் இணைந்து 27.04 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழில் வளாகத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதிய தொழில் வளாகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்றுக்காலை நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, விழாவில் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் இன்னொரு மைல்கல்லாக டிட்கோ மற்றும் டி.எல்.எப். நிறுவனம் இணைந்து அமைக்கப்படும் தொழில் வளாகம் அமைகிறது. இன்று இந்தப் புதிய உதயத்தை உருவாக்கி இருக்கும் ஒவ்வொருவரையும் நான் பாராட்டுகிறேன்.
மாநிலத்தில் மேலும் தொழில்துறை வளர்ச்சிக்கு அதன் மேம்பாட்டுக்கு ஆக்கப்பூர்வமான முறையில் அனைத்து முன்னணி நிறுவனங்களோடு அரசு எப்படி இணைந்து செயல்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்.
என்னுடைய அரசின் தீவிரமான தொடர் முயற்சிகள் காரணமாக, தமிழ்நாட்டில் பல புதிய முதலீட்டு திட்டங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. ஓராண்டு காலத்துக்குள் 59 ஜி.ஐ.எம் திட்டங்களின் வணிக ரீதியிலான உற்பத்திக்கு நம்மால் ஆதரவளிக்க முடிந்திருக்கிறது. மேற்கொண்டு 213 திட்டங்கள், அமுல்படுத்தும் பல்வேறு நிலைகளில் உள்ளன.
அரசு நடவடிக்கைகள்
அம்மாவின் வழியில் செயல்படும் எனது அரசும், தமிழ்நாடு தொழில் துறையில் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளை பெறவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன் வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கவும், ‘‘யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை நானே நேரடியாகச் சென்று அமெரிக்காவில் துவக்கி வைத்தேன். இந்தப் பயணத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும், துபாயிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, அதன் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. இதனால் 35 ஆயிரத்து 520க்கு மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேற்படி ஒப்பந்தங்களில் 5 நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதிகளை நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட, எனது தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 36 தொழில் திட்டங்களுக்கு பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 763 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன.
வானூர்தி தொழில் பூங்கா
மேலும், முதலீடு செய்வதை எளிதாக்குதல் பிரிவு, எனது அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழில் பூங்கா, மின்சார வாகனப் பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.
ஸ்டார்ட்  அப் எனும் புத்தொழில்களை ஊக்குவிக்க தனிக் கொள்கை, தகவல் தொழில்நுட்பக் கொள்கை, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை என தொழில் துறை மேம்பட பல்வேறு கொள்கைகளை வகுத்து, திட்டங்களை செயல்படுத்தி அம்மாவின் அரசு வெற்றி கண்டு வருகிறது.
குவைத் நாட்டைச் சார்ந்த அல் கராஃபி என்ற நிறுவனம் தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சுற்றுச்சூழலுக்கு உதந்த BS  SIX பெட்ரோலியப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நவீன பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி தொழிற்சாலையை துவக்க உள்ளது. இதன் மூலம், சிங்கப்பூர் நாட்டின் ஜுராங்க் தீவு, குஜராத்தில் உள்ள ஜாம் நகர் மற்றும் தஹேஜ் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியைப் போல, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களும் சிறப்பான வளர்ச்சியைப் பெறும்.
இது தவிர, உலகின் மிகப் பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பிஒய்டி, மாபெரும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விங்டெக் ஆகிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்களது புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளன.
தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டினை அம்மாவின் அரசு கூடுதலாக ஈர்த்துள்ளது என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
நாட்டின் முன்னணி இதழான ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பிராஸ்ட் அண்ட் சல்லிவன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஒட்டு மொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் ஐ.டி. தொழில் பிரிவு நிரந்தர வளர்ச்சி கண்டு வந்திருக்கிறது. ‘சாப்ட்வேர்  ஒரு சர்வீஸ்’ என்னும் தொழில் பிரிவுப் பகுதியில் தமிழ்நாடு இந்தியாவின் தலைமையாக இருந்து வருகிறது. பரந்த தொழிற்துறை அடித்தளம், உயர் தேர்ச்சி பெற்ற கல்வித்தகுதி உள்ள மனித சக்தி, நன்கு மேம்பாடு கண்ட அடிப்படை கட்டமைப்பு வசதி, உபரி மின்சார நிறுவனம் ஆகியவையே மாநிலத்தின் வல்லமைக்கு முக்கிய காரணமாகும்.
தொழில் முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசு அம்மாவின் அரசு. அவர்கள் தொழில் தொடங்க அனுமதி மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் குறுகிய காலத்தில் வழங்குவதும் அம்மாவின் அரசுதான். இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயரும் என்பதை உறுதிபட இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் தொழில் நிறுவனங்களின் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் உங்களது முதலீடுகள் அனைத்துக்கும் நாங்கள் முழு ஆதரவையும், உதவிகளையும் தொடர்ந்து அளிப்போம் என்று உறுதி கூறுகிறேன்.
இந்த விழாவினை நல்ல முறையில் ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, டி.எல்.எப். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீராம் கட்டார், டி.எல்.எப். நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மோஹித் குஜ்ரால் மற்றும் தொழில் அதிபர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *