BREAKING NEWS

கர்ப்பிணி ரசிகைக்கு வளையல் அணிவித்த ரஜினி

‘‘தர்பார்‘‘ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஒரு பெண்ணுக்கு வளையல் போட்டு விடும் படம் ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இது எப்போது நடந்தது? ஏன்? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இந்த போட்டோ பற்றி விசாரித்த போது, ரஜினியுடன் அந்த போட்டோவில் இருப்பவர் ராகவா விக்னேஷ் என்பதும்,ரஜினி வளையல் போட்டு விடும் பெண் அவரது மனைவி என்றும் தெரியவந்தது.
சம்பவம் பற்றி ராகவா விக்னேஷ் கூறியதாவது:-
எனது பெயர் ராகவா விக்னேஷ். எனது மனைவி பெயர் ஜெகதீஸ்வரி. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ளோம். எங்கள் குடும்பத்தில் என் அப்பா, நான் என அனைவரும் ரஜினியின் தீவிர ரசிகர்கள். எனக்கு பிப்.,1 ம் தேதி திருமணம் நடந்தது. எனது மனைவியும் ரஜினி ரசிகர் தான்..பிறகு கர்ப்பமான எனது மனைவியிடம் ‘‘உனது ஆசை என்ன?‘‘ என கேட்டேன்.
அதற்கு அவள் தனக்கு ரஜினியை பார்க்க வேண்டும் என்பது தான் என்ஆசை‘‘ என கூறினார். அவர் கர்ப்பமாகி 4வது மாதத்தில் இருந்து ரஜினியை சந்திக்க அபாயின்மென்ட் கேட்டிருந்தேன். ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பதற்காக என் மனைவி கர்ப்பமடைந்திருப்பதை யாரிடமும் சொல்லவில்லை.
‘‘தர்பார்‘ பட சூட்டிங்கின் கடைசி நாளில் ரஜினியிடம் நான் அபாயின்மென்ட் கேட்டது பற்றி கூறி உள்ளனர்.தற்போது என் மனைவிக்கு 9வது மாதம்.
இந்த தகவலை கூறியதும் திட்டிவிட்டு, ‘‘உடனடியாக வர சொல்லுங்கள்‘‘ என ரஜினி கூறி உள்ளார். சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றோம், அப்போது நடித்துக் கொண்டிருந்த ரஜினி, என் மனைவி கர்ப்பமாக இருப்பதை பார்த்து, கையெடுத்து கும்பிட்டபடி எங்களிடம் வந்து பேசினார். நாங்கள் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினோம்.
அப்போது என் மனைவி கையில் எடுத்துச் சென்றிருந்த வளையலை கொடுத்து, ‘‘அப்பா ஸ்தானத்தில் இருந்து இந்த வளையலை எனக்கு போட்டு விடுங்கள்‘‘ என கேட்டார்.
உடனே அவரே வளையலை வாங்கி இரு கைகளிலும் போட்டு விட்டார். அது சொல்ல முடியாத சந்தோஷம். இந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன்.
இவ்வாறு விக்னேஷ் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *