ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம்… நல்லகண்ணு உள்ளிட்ட 200 பேர் கைது

மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பிறகு, பல்வேறு மசோதாக்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மசோதாவில் ஈழத்தமிழர்களும், இஸ்லாமியர்களும் விடுபட்டுள்ளனர். இதனால், இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், வடகிழக்கு இந்தியா, வட இந்தியாவிலும் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த கலவரங்களில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர்.

தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்பினரும் கடந்த சில நாட்களாவே தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவதும் கல்லூரிகள் இந்த மாத இறுதிவரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு, எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெகலான் பாகவி, காங்கிரஸ் நிர்வாகி செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நல்லகண்ணு உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர். மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் எஸ்.எப்.ஐ. உள்ளிட்ட பல்வேறு மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட 200 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *