BREAKING NEWS

முட்கள் நிறைந்த பாதையில் பூக்களை மலரச் செய்தவன்..! – முனைவர் வைகைச்செல்வன்

அப்போது அவருக்கு 56 வயதுதான். இரண்டாவது முறையாக ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது…  அதே ஆண்டு அதாவது 1865-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று தனது மனைவியுடன்  ‘அமெரிக்கன் கஸன்’ என்ற நாடகம் பார்க்கச் சென்றிருந்தார் லிங்கன். அவர் நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்த போது, ஜான்வில்ஸ்பூத் என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனைக் குறிவைத்து சுட்டான். மறுநாள் காலை லிங்கனின் உயிர் பிரிந்தது.

 

அவரின் மரணம் அதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே, அவரின் கனவில் வந்து நிழலாடியது. நான் வெல்வதை விட உண்மையாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் மாபெரும் வெற்றிகளைப் பெறுவதை விட, என் அகவெளிச்சத்தின்படி வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால் அவருடன் நானும் உறுதியாக உடனிருப்பேன் என்று சொன்ன தருணத்தில்தான் மரணம் அவரைத் தழுவி விட்டது. தான் செய்த ஒன்றுக்காக, தான் கொல்லப்படலாம் என்று உணர்ந்தே அதைச் செய்தார். கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தில் வெற்றி கண்டாலும், அவ்வெற்றிக்கான விலை ஆபிரகாமின் உயிர் என்கிற போது, அந்த மானுட உணர்வாளரின் விலைமதிக்க முடியாத தியாகத்திற்கு  ஒவ்வொருவரும் தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்தாக வேண்டும்.

 

ஆபிரகாம் லிங்கன் தன் கனவை நனவாக்கிய மனிதன் மட்டுமல்ல. வாழ்வின் ஏராளமான கனவுகளையும் கண்டடைந்தவர். அவர் தன்னுடைய வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடம் விடாமுயற்சி என்பதை ஒவ்வொரு கணமும் செயல்படுத்தியும் இருக்கிறார். பிறருக்கு சொல்லியும் இருக்கிறார். ஆகவேதான், கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உலகிலேயே அதிக பலம் வாய்ந்த நபர் யாரேன்று கேட்டால், மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத எந்த மன்றத்திலும் தலைநிமிர்ந்து சொல்வேன், ஆபிரகாம்லிங்கன்தான் என்று.

 

1809-ம் ஆண்டு பிப்ரவரி 12-ம் நாள் கென்டக்கியில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தார் லிங்கன். அவரது தந்தை தாமஸ்லிங்கன் ஒரு தச்சர். தாயார் நோன்ஸி. லிங்கனின் 9-வது வயதிலேயே இயற்கையை தொட்டு விட்டார். குடும்பம் ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாகப் படிக்க முடியவில்லை. அவர் நியூ ஆல்ன்ஸ் நகரில் வசித்த போது, அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும், இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்துவதையும் கண்டார். சின்னஞ்சிறு பிஞ்சு வயதில் பசுமரத்தாணி போல் கறுப்பின மக்களின் துயரத்தின் வேதனை பதிந்து விட்டது. உலகத்திலேயே விலைமதிக்க முடியாத பரிசு எதுவென்று கேட்டால் பிறருக்காக விடும் கண்ணீர்தான் என்பார்கள். ஆமாம். லிங்கன் என்கிற 15 வயது சிறுவனாக இருக்கும்போது, அடிமைகளின் கொடூர வாழ்க்கையைக் கண்டு கண்ணீர் விட்டுக் கலங்கி அழுதார்.

 

ஒரு கறுப்பினத்துச் சிறுவன் தன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். வெள்ளை மழை பொழிந்தது. அவன் உடல் முழுவதும் பனித்துகள்களால் சூழ்ந்திருந்தது. வெளியில் இருந்து வீட்டுக்குள் ஓடிவந்த அச்சிறுவன் தன் தாயிடம், அம்மா நான் வெள்ளையனாகி விட்டேன் என்றான். இத்துயர் மிகுந்த வரிகளை எழுதுகிற போது, கண்ணீரால் எழுத்துகள் அழிந்து போய்விட்டன. அந்தச் சிறுவனுக்கு நிகழ்ந்திருக்கிற நிறவெறிப் போராட்டம் எத்தகைய துயரத்தைத் தந்திருக்கிறது என்பதை நாம் வார்த்தைகளால் அளந்து விட முடியுமா? அத்தகைய துயரத்துக்கு ஆறுதலாக, வடிகாலாக நின்றவர்தான் ஆபிரகாம்லிங்கன்.

“அமெரிக்காவில் உழைப்பதற்காக ஆப்பிரிக்கா கறுப்பின மக்கள் அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர். அடிமைகள் விலங்குகள் போல் நடத்தப்பட்டனர். அடிமைகள் மொட்டையடிக்கப்பட்டு, மார்பிலோ, நெற்றியிலோ எந்த முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர் என்பதற்கான அடையாளமாகப் பச்சை குத்தப்பட்டது.

 

கறுப்பினத்தின் பெண்ணடிமைகள் பாலியல் ரீதியான கொடுமைகளுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பெண்ணடிமைகள் கொடுமையான சித்ரவதைகளால் உயிரிழந்தார்கள். அடிமைகள் மனிதர்களாக நடத்தப்படுவதில்லை. அடிமைகளை வைத்து சூதாடுவது, அடமானம் வைப்பது, ஏலம் விடுவதின் மூலம் விற்பது, மனிதகுலத்திற்கே சவால் விடும் அளவிற்கு நிகழ்வுகள் நடந்தன. அடிமைகளுக்கு எந்த சட்டப்பாதுகாப்பும் இல்லை. திருமணம் செய்து கொள்ளக்கூட உரிமையில்லை. போதிய உணவு வழங்கப்படாமல், பட்டினிக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இத்தகைய அடிமைக் கலாச்சாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முனைந்தவர் ஆபிரகாம்லிங்கன்தான்.

 

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான லிங்கன் வாஷிங்கடனில் அடிமை ஒழிப்பு இல்லத்தில் வாடகைக்கு தங்கினார். அடிமை முறையை ஒழிக்க அஸ்தமனம், உதயம் என்று பாராது எப்போதும் அதே சிந்தனையில் ஆட்பட்டார். அதற்கு மாறாக அமெரிக்க செனட் சபை உறுப்பினர் டக்ளஸ் என்பவர் அடிமை முறையை நியாயப்படுத்தி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அக்கூட்டத்திற்கு சென்றிருந்த லிங்கன் மறுநாள் பதிலளித்து உரையாற்றுவதாக அறிவித்தார். மறுநாள் மூன்று மணிநேரம் லிங்கன் அங்கே உரையாற்றினார்.

 

‘மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம், அதன்படி ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமையாக்குவது, தார்மீக உரிமைக்குப் புறம்பானது’ என்பதை வலியுறுத்திப் பேசினார். அடிமை முறையை ஒழித்திடக் குரல் எழுப்பிய குடியரசுக்கட்சியில் லிங்கன் 1858-ம் ஆண்டு இணைந்தார். மாநில செனட் தேர்தலில் போட்டியிட்டார். கறுப்பின மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை முன்வைத்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதே டக்ளஸ் லிங்கனை எதிர்த்துப் போட்டியிட்டார்.  இருவரும் ஒரே மேடையில் உரையாற்றினார்கள். அசைக்க முடியாத அந்த சொற்போரின் மூலம் லிங்கன் புகழ்மிக்க தலைவரானார். ஆனாலும், வெற்றிவாய்ப்பை இழந்தார். அடிமை வியாபாரம் பாதிக்கும் என முதலாளிகள் பலர் லிங்கனைத் தோற்கடித்து விட்டனர்.

 

பின்னர் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட அதே டக்ளஸ் என்பவருக்கும், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட லிங்கனுக்கும் கடுமையான போர் நிலவி, அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து 1859-ம் ஆண்டு நவம்பர் 6-ம் நாள் தேர்தலில் வெற்றி பெற்று மார்ச் மாதம் 4-ம் நாள் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் லிங்கன். ஒரு கூலித் தொழிலாளியின் மகன் வெள்ளை மாளிகையில் குடியேறியது வரலாற்றில் ஒரு புதிய தருணமாகவே பார்க்கப்பட்டது. 1859-ம் ஆண்டு நீங்கள் ஏன் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடக் கூடாது? என நண்பர் ஒருவர் கேட்ட போது, அந்தத் தகுதி எனக்கில்லை என்று பணிவாகப் பதிலளித்த அதே லிங்கன், காலம் தீர்மானித்து விட்டது. இவர்தான் அமெரிக்காவின் 16-வது அதிபர் என்று. அப்போதுதான் 15வது வயதில் தாம் எடுத்த அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்கிற தீராத நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அத்தீர்மானத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார். ஏனெனில், பதவி ஏற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862-ம் ஆண்டு, அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக் கூடாது என்று பிரகடனம் செய்தார்.

 

அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால், பொருளாதார வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று அடம் பிடித்தனர். மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததால், தங்களுக்கு அடிமைகள் தேவையில்லை என்று கருதினர். இந்த இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு, உள்நாட்டுக் கலகமாக வெடித்தது. அடிமைத்தளையை அறுத்து எறியவும், அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும், போர் அவசியம் என்று துணிந்தார். அடிமை முறையை ஒழிப்பதை தென்மாநிலங்கள் எதிர்த்தன. அமெரிக்கக் கூட்டாட்சியில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்தின.

 

1861-ம் ஆண்டு தென் கரோலினா மாநிலம் கூட்டாட்சியில் இருந்து விலகியது. அதைத் தொடர்ந்து புளோரிடா, அலபாமா, மிசிசிபி, ஜார்ஜியா, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களும் பிரிந்தன. இதனால் தென்மாநிலங்களுக்கு இடையே போர் மூண்டது. நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க லிங்கன் தெண்டர் படையை அமைத்தார். நான்காண்டு காலம் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. போரில் வெற்றி பெற்ற லிங்கன் தென் மாநிலத்தவரைப் பழி வாங்காமல் பெருந்தன்மையுடன் பொது மன்னிப்பு வழங்கினார்.

நாம் வாழும் உலகில் நம்மாளும் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அதற்கு தேவைப்படுவதெல்லாம் சிந்தனையில் தெளிவும், செயலில் துணிவும்தான் என்கிற ஆபிரகாம்லிங்கனின் வார்த்தைகள் இருட்டும் உலகத்திற்கு வெளிச்சத்தைத் தந்து கொண்டே இருக்கின்றன.

 

ஆமாம், லிங்கன் 1863-ம் ஆண்டு ஜனவரி 2-ம் நாள் அடிமை விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார். அவரின் கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு வரலாற்றில் இன்னும் பேசப்படுகிறது. மக்களின் அரசுரிமை, இறையாண்மை, ஜனநாயக உணர்வு, அடிமை முறை ஒழிப்பு, கறுப்பின மக்களின் சுதந்திரம் ஆகிய உயரிய உன்னத லட்சியங்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடி வெற்றி கண்டவர் ஆபிரகாம்லிங்கன்.

 

ஆபிரகாம்லிங்கன் பிறந்தது ஞாயிறு, அவர் முதன்முறையாக ஜனாதிபதியானது திங்கள், இரண்டாவது முறையாக ஜனாபதியானது செவ்வாய், வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டது புதன், பிரசித்தி பெற்ற கெட்டிஸ்பர்க்கில் உரையாற்றியது வியாழன், லிங்கன் சுடப்பட்டது வெள்ளி, உயிர் நீத்தது சனி, ஆபிரகாம்லிங்கனின் ஒரு வாரம் ஒரு வரலாறாய் நமக்குள் பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறது.

 

                                                                                                                                கட்டுரையாளர்:

                                                                                                                 முனைவர் வைகைச்செல்வன்

                                                                                                     மேனாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *