BREAKING NEWS

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஒருவார கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பிப்2 முதல் 8 வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், குடியுரிமை சட்டம், என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் இதுபற்றி பேசுகையில், மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும். என்ஆர்சி தயாரிக்கக்கூடிய எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது. என்பிஆர் தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்கக்கூடாது என்ற தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். பிப்ரவரி 2 முதல் 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தி, அதன் பிரதிகளை, நேரம் கிடைத்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வழங்குவோம்.

ஒவ்வொரு மாவட்டம், நகரம், ஊராட்சி ஒன்றியங்களில் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்பார்கள். கட்சி சார்பற்றவர்கள், பொது மக்கள், மாணவர்கள், வணிகர்கள் ஆதரவு தர வேண்டும். குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற முடியாது என அமித்ஷா தெரிவித்திருந்தாலும், நாங்கள் தொடர்ந்து எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *