BREAKING NEWS

டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் 16-ந் தேதி பதவியேற்கிறார்:

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பிப்ரவரி 16-ந் தேதி கெஜ்ரிவால் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணத்துக்கு எதிராகவும், ஊழழுக்கு எதிராகவும் போராடிய அன்னா ஹசாராவின் இயக்கத்தில் இடம் பெற்றிருந்தவர் தான் அரவிந்த் கெஜ்ரிவால். ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சமூக பணியில் மிகுந்த அக்கரை கொண்டு செயல்பட்டு வந்தார். வருமான வரித்துறையில் பணிபுரிந்து, ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் குதித்த அரவிந்த் கெஜ்ரிவால் சாமானிய மக்களை மேம்படுத்தும் திட்டத்துடன் ஆம்ஆத்மி கட்சியை தொடங்கி டெல்லி தேர்தலில் களம் இறங்கினார். 2013, 2015-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் டெல்லி மக்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைத்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்க கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. தற்போதும் அவருக்கு 3-வது முறையாக டெல்லி மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். 62 தொகுதிகளை அவரது கட்சி கைப்பற்றி மீண்டும் சாதனை படைத்துள்ளது.

ஆம்ஆத்மி கட்சி சார்பில் தேர்வான 62 எம்.எல்.ஏ.க்கள் நேற்று கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்றனர். அங்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஆம்ஆத்மி கட்சி சட்டசபை தலைவராக கெஜ்ரிவால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் முதல்வராக ஆதரவு தெரிவித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து போட்டனர். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அந்த கடிதத்துடன் டெல்லி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வேண்டும். ஆனால் கெஜ்ரிவாலுக்கு 62 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது.

புதிய ஆட்சி அமைவதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. கெஜ்ரிவாலுடன் அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்பு விழாவை நடத்தலாமா? என்று முதலில் விவாதிக்கப்பட்டது. அதன் பின் 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்பு விழாவை, ராம்லீலா மைதானத்தில் நடத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த முறை அமைச்சர்களாக இருந்த அனைவரும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் அமைச்சராக வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை மிக எளிமையாக நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் மக்கள் முன்னிலையில் பதவி ஏற்க விரும்புவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். இதையடுத்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவுக்கான பந்தல் அமைப்பு பணிகள் தொடங்கி விட்டன.

டெல்லி உள்பட பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதால்,. அதற்கேற்ப குடிதண்ணீர், கழிவறை வசதிகள் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள வரும்படி பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் ஆம்ஆத்மி சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *