BREAKING NEWS

பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் தற்காலிகமானதுதான்

பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் தற்காலிகமானது தான் என மலேசியாவின் பாமாயில் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமையை மத்திய அரசு ரத்து செய்தது. இது தொடர்பாக மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா, காஷ்மீருக்குள் ஊடுருவிவிட்டதாக, கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.
அதுமட்டுமல்லாது, குடியுரிமை சட்ட திருத்தத்தையும் மலேசியா கடுமையாக விமர்சித்தது. இதனால், காலம் காலமாகத் தொடர்ந்து வரும் இந்தியமலேசிய உறவில் சிக்கல் ஏற்பட்டது. மலேசியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய வணிகர்கள் அதைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
வணிகர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் கூட, புறக்கணிக்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதாவது, ஏறக்குறைய அறிவிக்கப்படாத தடை. பாமாயில் இறக்குமதியை வணிகர்கள் புறக்கணித்திருப்பது, மலேசிய பொருளாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், அந்த நாட்டின் மொத்த ஏற்றுமதியில் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஏற்றுமதி மட்டும் 4.5 சதவீதம். சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பெருமளவுக்கு இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், மலேசியாவின் பாமாயில் கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நீண்ட காலமாக இருதரப்பு உறவுகளை கொண்டிருக்கும் இருநாடுகளும் தற்போதைய சவாலான சூழலில் இருந்து மீண்டு வரும் பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் தற்காலிகமானது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *