BREAKING NEWS

டி 20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

நியூசிலாந்தில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு கப்டில், மன்ரோ ஜோடி அதிரடியாக ஆடியது.  முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது, ஷிவம் துபே பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட கப்டில் (30), ரோகித்தின் ‘சூப்பர்’ கேட்சில் திரும்பினார். மன்ரோ, 36வது பந்தில் அரைசதம் எட்டினார். இது இவரது 10வது அரைசதம். இவர் 42 பந்தில் 59 ரன்கள் எடுத்த போது, ஷர்துல் தாகூரிடம் சரிந்தார். கிராண்ட்ஹோம் ‘டக்’ அவுட்டானார்.

பின் கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தனர்.  அரைசதம் அடித்த வில்லியம்சன் (51) சகால் சுழலில் சிக்கினார். செய்பெர்ட் (1), பும்ரா ‘வேகத்தில்’ வீழ்ந்தார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது. ராஸ் டெய்லர் (54), சான்ட்னர் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ரோகித் சர்மா 7 ரனனுக்கு அவுட்டானார். லோகேஷ் ராகுலுடன் இணைந்தார் கோஹ்லி. டிக்னெர் பந்தில் கோஹ்லி சிக்சர் அடிக்க, மறுபக்கம் ராகுல், சவுத்தீ, சான்ட்னர் பந்துகளில் பவுண்டரி, சிக்சர் என விளாசினார். இவர் 23 வது பந்தில் அரைசதம் அடித்தார்.இந்திய அணி 9 ஓவரில் 107/1 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதன் பின் திடீரென சொதப்பியது. ராகுல் (56), கோஹ்லி (45) சீரான இடைவெளியில் வெளியேறினர். சான்ட்னர் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த ஷிவம் துபே (13) நீடிக்கவில்லை.

ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே இணைந்து போராடினர். கடைசியில் ஸ்ரேயாஸ் ஒரு சிக்சர் அடிக்க, இந்திய அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி 26ம் தேதி நடக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *