BREAKING NEWS

குரூப்-4 தேர்வு முறைகேடு: 99 தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தேர்வாணையம் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

குரூப்-4 முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் இன்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். கிராம நிர்வாக அலுவலர்,  இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடக்கிய 9,398 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி குரூப்-4 தேர்வு  நடத்தப்பட்டது. 16,29,865 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 12-ந் தேதி அன்று வெளியிடப்பட்டது. 24,260 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.

தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததும் தெரிய வந்தது. சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.

இந்ததேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிரமாக ஆய்வு செய்தது. சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்களிலும், கருவூலங்களிலும் ஆய்வு நடைபெற்றது. தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *