BREAKING NEWS

குரூப்-4 தேர்வு முறைகேடு; மேலும் 3 பேர் கைது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தொடர்புடையதாக மேலும் 3 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி, குரூப்-4, குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து அரசு பணிகளில் சிலர் சேர்ந்தது அம்பலமாகியது. சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஜாபர் சேட் தலைமையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட நாளில் இருந்து தினமும் குற்றவாளிகளின் கைது பட்டியல் வெளியிடப்பட்டது.

கைது நடவடிக்கை அதிரடியாக தொடர்ந்து வந்த இந்த வழக்கில் இதுவரை டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் ஓம் காந்தன், மாணிக்கவேலு, போலீஸ்காரர்கள் சித்தாண்டி, முத்துக்குமார், பூபதி ஆகியோர் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஜெயக்குமார் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதும் கோடிக்கணக்கான சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. ஜெயக்குமார், சித்தாண்டி, ஓம் காந்தன் ஆகிய 3 பேரையும் காவலில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில்,  ஓம் காந்தன் அளித்த தகவலின் பேரில் கூட்டாளிகள் 3  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *