BREAKING NEWS

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் மீண்டும் சோதனை

தமிழக போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, செந்தில் பாலாஜி 16 பேரிடம் தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 95 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளதாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கியது. மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு ஆஜராகி கையெழுத்தும் போட்டு வந்தார். இந்நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜனவரி 31 ஆம் தேதி அன்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூர், திருவண்ணாமலை வீடுகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அதே போன்று இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய நபர்களின் 17 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் வாங்கிய ரசீதுகள்,கார் பைக் தொடர்பான ஆவணங்கள்,வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களின் விவர குறிப்புகள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள், கோடிகணக்கில் பெற்ற பணம் குறித்த விபரங்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் லேப்டாப் மற்றும் பென்ட் டிரைவ்,மெமரி கார்டு,அசல் சொத்து ஆவணங்கள், வங்கி காசோலை புத்தகங்கள், வங்கி கணக்குகள், இரும்பு பெட்டக சாவி இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.  தொழில் நுட்பம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தடவியல் துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு கடந்த 31ஆம் தேதி மத்திய குற்றபிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

இன்று காலை செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரின் முன்னிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வீட்டின் பூட்டை திறந்து சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் பணம் பெற்றதற்கு தொடர்பான ஆவணங்களை திரட்டும் பணியில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *