BREAKING NEWS

பொறியாளர்கள் ஆசிரியராகலாம்… வரவேற்கத்தக்க முன்னுதாரணம்..!

ஆண்டுதோறும் இந்திய அளவில் சுமார் நான்கு லட்சம் பொறியாளர்கள் பட்டம் பெற்று வெளியாகிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சம் பொறியாளர்கள் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர்.  இதற்காகவே தமிழகத்தில் 330 பொறியில் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.  லட்சக்கணக்கில் செலவழித்துப் படிக்கும் இந்தப் பொறியியல் படிப்பிற்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் மிகவும் அரிதாகி வருகின்றன.  கடந்தாண்டு தமிழக சட்டமன்ற செயலகம், துப்புரவுப் பணியாளர்களுக்காக 14 பேர் வேண்டும் என்கிற அறிவிப்பிற்கு 4 ஆயிரத்து 607 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர்.  இந்த துப்புரவுப் பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்பதுதான் தகுதி.  ஆனால், இந்த 14 பேர்களின் துப்புரவுப் பணிக்காக விண்ணப்பித்தவர்கள் பெரும்பாலும் பட்டதாரிகள்.  அதிலும் பொறியியல் படிப்பை முடித்த இன்ஜினீயர்கள் எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற பட்டதாரிகளும் இப்பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த வேலையில்லாச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் சமீபத்தில் தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது.  மேலும் தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும் வெளிநாடுகளில் பயணம் செய்து வெளிநாடு வாழ் இந்தியர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளை  உருவாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், தற்போது பொறியியல் படிப்பைப் படித்து முடித்த மாணவர்கள் நேரடியாக தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) கலந்து கொள்ளும் வாய்ப்பினை உருவாக்கித் தந்துள்ளது.  இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேவை என்பதுடன், பட்டப்படிப்பு முடிந்த பிறகு, பி.எட் எனப்படும் ஆசிரியர் பணிக்கான பட்டயப் படிப்பை இரண்டு ஆண்டுகள் படித்து, தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியும்.  தற்போதைய தமிழக அரசின் அறிவிப்பு என்பது நான்கு ஆண்டுகள் பொறியியல் படித்து பட்டம் பெற்றிருந்தாலே ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியும் என்கிற வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பொறியியல் மாணவர்கள் நேரடியாக 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிதப் பாட ஆசிரியராகும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.  பொறியியல் பட்டம் பெற்று வேலை தேடி அவதியுறும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இந்த அறிவிப்பு நிச்சயமாக உற்சாகத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.  ஒரு பட்டப்படிப்பை முடித்து பிறகு இரண்டு வருடம் பி.எட் படிப்பதென்பது ஐந்து ஆண்டு படிப்புகள் ஆகும்.  ஆனால், இந்த அறிவிப்பின் மூலம் நான்காண்டு பொறியியல் படிப்பு மட்டுமே பி.எட் பட்டப் படிப்பிற்கு சமமாகக் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்க முன்னுதாரணமாகும்.

மேலும், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற பலர் இன்னும் ஆசிரியர் பணிக்குச் செல்லாமலேயே உள்ளனர்.  தமிழக அரசு இதனையும் கவனத்தில் கொண்டு உடனுக்குடன் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் தொடங்கி மேல் நிலைப்பள்ளி வரையிலும் காலியாகும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்வர வேண்டும்.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, பள்ளிகல்வித் துறையைத் தவிர போக்குவரத்து உள்ளிட்ட வருவாய்த்துறைகளிலும் வேலையில் அமர்த்த முடியுமா எனப் பரிசீலித்து அந்த வகையில் TET தேர்வில் தேர்ச்சியானவர்களை பயன்படுத்தினால் நல்லதொரு தொடக்கமாக அமையும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *