தர்பார் – விமர்சனம்

போதை கும்பலை வேட்டையாடும் ஒரு தைரியமான போலீஸ் அதிகாரியின் கதை இது.
போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். ‘‘யாரோ ஒரு போலீஸ் அதிகாரி எல்லா ரவுடிகளையும் ‘என்கவுண்டர்‘ பண்றானாமே.. எங்கே அவனை என்னை போட்டு தள்ளச்சொல்லு‘.. பார்க்கலாம்.‘ என ஒரு ரவுடி ‘வாட்ஸ் அப்‘‘ அனுப்ப – அவனை அவன் கோட்டைக்குள்ளேயே சென்று ‘போட்டு‘ தள்ளி விட்டு -‘‘ கிழி கிழி‘‘ன்னு ஒரு பாட்டுக்கு ஆடும் ரஜினியின் ‘எண்ரி‘ செம மாஸ். அது போக போக விரிவடைந்து,சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் செய்யும் கும்பல் -அடிதடி செய்யும் ரவுடிகள் -என அனைவரையும் அழித்து இறுதியாக போதை மருந்து கடத்தல் தலைவனின் மகனை கைது செய்து சிறையில் அடைக்கும் போது அனல் பறக்கிறது.
ஆனால் கடத்தல் கோஷ்டி தலைவன் தனது செல்வாக்கை பயன்படுத்தி சிறையில் தன் மகனுக்கு பதிலாக வேறு ஒருவனை ‘உட்காரவைத்து‘ விட்டு- மகனை வெளிநாட்டுக்கு அனுப்பி விட -அதை அறிந்து கொள்ளும் ரஜினி புத்திசாலிதனமாக செயல்பட்டு அவனை இந்தியாவுக்கு வரவழைத்து தந்தையின் மூலமாகவே அவனுக்கு மரணம் கிடைக்க செய்கிறார். இடைவேளை வரை படத்தின் கதையில் வேகமும் விறுவிறுப்பும் அதிகம். ‘அட.. முருகதாஸ் புத்திசாலிதமாக கதை சொல்லி இருக்காருய்யா..’’ என சொல்லவைத்து இருக்கிறார்,
ஆனால் அதன் பின் கதை திசை மாறி எங்கெங்கோ சென்று பிற்பகுதி தள்ளாடுகிறது.
ஆனால் ரஜினி தடுமாறவில்லை. வயது 70 ஆனபோதிலும் தான் இன்னும் ‘இளமை’ தான் என காட்டிக்கொள்ள ஆட்டமும் பாட்டமும் போட்டு ‘ஸ்டைல்‘ நடைபோடுகிறார். அதிலும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ‘திருநங்கை‘களை நடனம் ஆடச்சொல்லிவிட்டு, தன்னை தாக்க வந்த ரவுடிகளை ‘‘டான்ஸ்‘‘செய்தபடி பந்தாடும் இடம் அமர்களம். என்ன தான் காரணம் சொன்னாலும் ரஜினியின் தலைமுடியும் –தாடியும் ‘கம்பீர‘மான போலீஸ் அதிகாரியின் மிடுக்கை குறைத்து இருப்பது நிஜம்.
நயன்தாராவுக்கு சம்பளம் 5 கோடியாம்.கொடுத்த காசுக்காவது கொஞ்சம் நடிக்கவோ இல்லை ஒரு பாட்டுக்கு நடனமோ ஆட விட்டு இருக்கலாமே? சும்மா நடக்கவிட்டு அனுப்பி இருக்கிறார்கள். தோற்றத்திலும் முதுமை தெரிய தொடங்கி இருக்கிறது.
ரஜினி மகளாக நிவேதா தாமஸ். படத்தில் இருக்கும் ஒரே இளமை இவர் தான்..இவர் சாகபோகிறது முதலில் தெரியுமோ என்னவோ? தனக்கு பிறகு தன் தந்தையை கவனித்துகொள்ள ஒரு பெண்ணை தேடும் மகள் வேடம். அவர் பார்க்கும் பெண் தான் நயன் தாரா. அவரை காதலிக்க ரஜினி செய்யும் குறும்பு – செம குறுகுறுப்பு. அவருக்கு சரியான பக்க பலமாக யோகிபாபு. ‘கவுண்டர்‘ வசனத்தில் சிரிப்பை அள்ளுகிறார்.
வில்லனாக இந்தி நடிகர் சுனில் ஷெட்டி. இவரை விட இவரால் குத்தி கொலை செய்யப்படும் மும்பை கடத்தல் தலைவன் அஜானுபாகுவான உடம்போடு அசத்தலாக இருக்கிறார். சூரத்தனமான வில்லனாக இருக்கானே நினைத்துகொண்டு இருக்கும் போது இவரை சர்வ சாதாரணமாக சுனில் ஷெட்டி கொல்வது- திருப்பம். ‘ஆகா பலே வில்லனாக இருக்க போகிறார்‘‘ என நினைத்தால் பம்முகிறார், இந்த வில்லன். ’இவரையும் ரஜினியையும் சும்மா மோதவிட்டு எடுக்கப்பட்டு இருக்கும் கிளைமாக்ஸ்‘ சாதா ரகம்.
‘‘கிழி‘‘ பாடலை ‘கிழி கிழி‘ என கிழித்து எடுத்து இருக்கும் இசை அமைப்பாளர் அனிரூத் மற்ற பாடல்களில் ‘சவுண்ட்‘டை கிழிய விட்டு இருப்பது ஏனோ?
ரஜினியும் அவரது மகள் நிவேதா தாமசும் விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட –மகள் நிவேதாவிடம்‘‘உங்க அப்பா 5 மணி நேரத்தில் பிழைத்து கொள்வார் .. ஆனால் நீ இன்னும் 2 மணி நேரம் தான் உயிரோடு இருப்பாய்..‘‘ என தலைமை டாக்டர் சொல்கிறார். அது சரி 2 மணி நேரத்தில் சாகப்போகிறவருக்கு முதலில் சிகிச்சை அளிக்க வேண்டாமா? கடைசி வரை நிவேதாவுக்கு சிகிச்சையே அளிக்கவில்லையே முருகதாஸ் சார்‘‘
‘‘சார்..அந்த கைதி செல்போன் வச்சிருக்கான்’’ என ஒரு போலீஸ் ஜெயிலில் சொல்ல ‘‘காசு இருந்தா செல்போன் என்ன.. ‘ஷாப்பிங்‘ கூட போயிட்டு வரலாம்..‘‘ என்ற பதில் வசனம் செம நக்கல். முருகதாஸ் தைரிய சாலி தான். …
மும்பை தான் கதை களம் என்பதால படம் முழுக்க மும்பையிலேயே எடுத்து இருக்கிறார்கள். அதோடு படம் முழுக்க மும்பை துணை நடிகர்களும் நடிகைகளும். அதனால் படம் தமிழ் படம் போலவும் இல்லை. இந்தி படம் போலவும் இல்லை.

ஆனாலும் ‘தர்பார்‘‘ விறுவிறுப்பான படமே.
One thought on “தர்பார் – விமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *