BREAKING NEWS

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை

சட்டசபை கூட்டம்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 6-ந் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. பொங்கல் பண்டிகை காரணமாக 5 நாட்கள் மட்டுமே நடைபெற்ற இந்த கூட்டத்தொடர், தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின்போது தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதம் எழுப்பவும், அவையை முடக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில், சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக நிதிநிலை அறிக்கையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால், நிதிநிலையில் இடம்பெற உள்ள புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
நிதிநிலை அறிக்கை
மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலினால் உலகம் முழுவதும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரிசோதனை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு உபகரணங்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பொதுத்தேர்வு ரத்து
இதையடுத்து, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து வந்த காரணத்தால், இதுதொடர்பாக தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தக்கூட்டத்தொடரை சிறப்பாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என்பது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பிறகு, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, ஆவின் நிறுவனத்தின் வருவாயை உயர்த்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்தனர்.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *