BREAKING NEWS

பாமக-அதிமுக கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும்: ராமதாஸ் பேட்டி

பா.ம.க. சார்பில் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டிவருமாறு:-

பா.ம.க. சார்பில் 18-வது வருடமாக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது. இது தமிழக மக்கள் வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் வெளியிடப்படுகிறது.

எந்த கட்சியும் செய்யாததை பா.ம.க. செய்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிட்டு அரசுக்கு உதவுகிறார்கள். அதுபோல நாங்களும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை அரசுக்கு தெரிவிக்கிறோம். இந்த நிழல் நிதிநிலை அறிக்கையில் 120 தலைப்புகளில் 434 யோசனைகள் கூறி இருக்கிறோம்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பாக முறையான விசாரணை நடந்து வருகிறது. இதில், அமைச்சர்கள், அரசுக்கு தொடர்பு இருக்காது.

டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றதன் மூலம் 3-வது முறையாக கெஜ்ரிவால் முதல்வர் ஆகிறார். தேர்தலில் மாற்றங்கள் வருவது இயல்புதான்.

தி.மு.க. தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கட்சியில் அறிவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளதால்தான் அவரை அழைத்து இருக்கிறார்கள்.

இதற்காக பீகாரில் இருந்து அவர் வந்துள்ளார். இதற்கு ரூ.360 கோடி கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியாவது வரும் தேர்தலில் ஜெயிக்க வழி தேடுகிறார்கள்.

உயர்கல்வி நிறுவனங்களில் மத்திய அரசு தலையிடுவதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. தமிழகமே கல்வித்துறையில் தனித்து வளர வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை விற்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை கண்டிக்கிறோம். அதற்கான வழிமுறைகளை காண வேண்டும்.

நேற்று ரஜினி பற்றி நான் கூறிய கருத்தை திரித்து வெளியிட்டு விட்டார்கள். எங்களைப் பொருத்தவரை அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலிலும், அதன் பிறகு வரும் தேர்தலிலும் இந்த கூட்டணியில் இருப்போம்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *