அண்ணா பல்கலைக்கழகம் மேலும் வளர்ச்சி பெறட்டும்..!

இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றுதான், அண்ணா பல்கலைக்கழகம்.  1978-ம் ஆண்டில் சென்னையில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக் கழகம், பொறியில், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் என இந்தப் பல்கலைக் கழகத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.  தற்போது உலகளவில் தரம் உயர்த்துவதற்காக அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் பல்கலைக் கழக மானியக்குழு சில நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.

எமினென்ஸ் இன்ஸ்டிடியூட் பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகத்தை இணைப்பதற்காக, தற்போதைய கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்றும் எமினென்ஸ் இன்ஸ்டிடியூட் என்கிற வரிசையில் இந்தப் பல்கலைக் கழகம் வந்துவிட்டால் அண்ணா பல்கலைக் கழகம் ஒரு தனி உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனமாக செயல்படத் தொடங்கும்.  இதனால் சர்வதேச அளவில் கவனிக்கப்பட வேண்டிய வகையில் உயர்கல்வி நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

தற்போது வரையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.  (Colleges Affiliated Anna University) இந்த நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தை அண்ணா எமினென்ஸ் இன்ஸ்டிடியூட் என்றும், இன்னொரு பகுதியை வழக்கம் போல் அண்ணா பல்கலைக் கழகம் என்கிற பெயரிலேயே தொடர்ந்து இயங்கி வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இதன்கீழ் மற்ற தமிழக பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரப்படும்.  மேலும் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் என்கிற வகையில் பல்கலைக் கழக வேந்தர் நிர்வாகம் அறிவித்துள்ளது.  அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா எமினென்ஸ் எனவும், தனியார் பொறியியல் கல்லூரிகளை இணைக்கும் அண்ணா பல்கலைக்கழகம் என இண்டாகப் பிரிக்கும் இந்தப் பணிகளுக்கு தமிழக அமைச்சரவைக் குழு கூடி வந்து ஐந்து அமைச்சர்களை நியமித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.  தமிழக அரசு நியமித்துள்ள இந்தக் குழுவில் ஆய்வாளர்களோ, அண்ணா பல்கலைக் கழக நிர்வாகிகளையோ ஏன் சேர்க்கப்படவில்லை என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது.

மேலும் இந்தியாவின் பல்கலைக் கழக மானியக் குழுவின் கீழ் அண்ணா எமினென்ஸ் வந்தால் அதனால் தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு முறைக்கு ஆபத்து வருமா என்றெல்லாம் அச்சம் ஏற்பட்டுள்ளது.  உடனடியாக தமிழக முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்து இதற்கான விளக்கத்தையும் தந்துள்ளார்.  அண்ணா எமினென்ஸ் என்கிற உயர்கல்வி நிறுவனத்திலும் தமிழக அரசின் இட ஒதுக்கீடுக் கொள்கை கட்டாயம் பின்பற்றப்படும் என்று அறிவித்துள்ளார்.  இந்தியாவிலேயே 69 சதவிகித இட ஒதுக்கீடு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.   எனவே, அதே வகையில்தான் அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப் பட்டாலும் இடஒதுக்கீடு முறை தொடரும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது பாராட்டத்தக்கது.

மேலும் தமிழக அரசு தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருவது பொதுவாக கல்வியாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.  குறிப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் பாடத்திட்டத்தில் மாறுதல் செய்து தமிழகத்தின் மண்சார்ந்த வரலாறு, உள்ளிட்ட பாடங்கள் மற்றும் திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் என பணியாளர் தேர்வில் கொண்டு வந்திருப்பது பாராட்டுதலுக்குரியதாகும்.  அதேபோல உலகத்திலேயே தலைசிறந்த கல்வியை போதிக்கும் பின்லாந்து நாட்டு கல்வியாளர்களை தமிழகத்தில் வரவழைத்து, அரசுப் பள்ளியின் ஆசிரியர்களுக்கு கற்றல் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கலந்துரையாடல் செய்திருப்பதும் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.  அந்த வரிசையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அண்ணா எமினென்ஸ் என்று மாற்றம் பெருவதும் தமிழக அரசுக்கு ஒரு மைல்கல்லாக அமையட்டும்.

 
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *