- அரசியல் செய்திகள், செய்திகள்

9,10,11–ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ‘பாஸ்’ தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

2020–-21–ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11–ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாகவும், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டசபையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

2020–-21–ம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19–ம் தேதி முதல், 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இந்த கல்வியாண்டு முழுவதும் மாணாக்கர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக மட்டுமே கல்வி பயின்று வந்தனர். மாணாக்கர்கள் தொலைக்காட்சி மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், கல்வி பயின்று வருவதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

மேலும், இந்த கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும், 2020–-21–ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11–ம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசினால் விரிவாக வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதே போன்று அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59–லிருந்து 60 ஆக உயர்த்தி சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த உத்தரவு 2021ம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என முதல்வர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது, 58–-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில், அரசாணை வெளியிடப்பட்டது. அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது அமலில் உள்ள 59 வயது என்பது, 60 வயதாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்.

இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply