- உலகச்செய்திகள், செய்திகள்

88-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா சிறந்த திரைப்படமாக ‘ஸ்பாட்லைட்’ தேர்வு

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச். 1:- அமெரிக்காவில் நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படமாக ‘ஸ்பாட்லைட்’ தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. ‘மேட் மேக்ஸ்’ திரைப்படத்துக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகராக ‘தி ரிவெனன்ட்’ திரைப்பட நாயகன் டிகாப்ரியோவும், சிறந்த இயக்குனராக இந்த திரைப்படத்தின் இயக்குனர் அலெஜாண்ட்ரோ ஜி. இனாரிட்டுவும் விருதுகள் பெற்றனர். சிறந்த நடிகைக்கான விருது ‘ரூம்’ படத்தில் நடித்த பிரே லார்சனுக்கு வழங்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பு

உலகம் முழுவதும் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த, 88-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் மையத்தில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வதற்காக, உலகம் முழுவதும் இருந்து திரைப்பட கலைஞர்கள் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்தியாவில் இருந்து பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா விழாவில் கலந்து கொண்டார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘தி ரிவெனன்ட்’, சிறந்த திரைப்படமாக தேர்வாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த விருதினை ‘ஸ்பாட்லைட்’ திரைப்படம் தட்டிச் சென்றது. அமெரிக்காவில் கத்தோலிக்க தேவாலயத்தின் நடந்த பாலியல் விவகாரங்களை, அந்நாட்டின் ‘தி பாஸ்டன் குளோப்’ என்ற பத்திரிகை, புலனாய்வு செய்து உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தியது. அந்த சம்பவங்களை மையமாக கொண்டு, ஸ்பாட்ைலட் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் ஹீரோ
சிறந்த நடிகருக்கான விருது, பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடி ‘தி ரிவெனன்ட்’ திரைப்பட நாயகன் லியோனடோ டிகேப்ரியோவுக்கு வழங்கப்பட்டது. பெரும்பாலானோர் அறிந்த ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் ஹீரோ இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1993-ல் டிகேப்ரியோ நடித்த ‘வாட்ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்’ என்ற படம் வெளியானது. இதில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெறுவதற்கு டிகேப்ரியோ பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், விருது அவருக்கு கிடைக்கவில்லை. இதன்பின்னர் 5 முறை சிறந்த நடிகருக்கான விருதைப் பெற அவரது பெயர் முன்மொழியப்பட்டது. இந்த நிலையில், தி ரிவெனன்ட் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும்….

இதேபோன்று சிறந்த இயக்குனருக்கான விருதை, ‘தி ரிவெனன்ட்’ திரைப்படத்தை இயக்கிய அலெஜாண்ட்ரோ ஜி. இனாரிட் தட்டிச் சென்றுள்ளார். இவர் ‘பேர்ட் மேன்’ திரைப்படத்துக்காக கடந்த ஆண்டும் ஆஸ்கார் விருது பெற்றார். சிறந்த திரைப்படம், திரைக்கதை, இயக்கம் ஆகிய 3 விருதுகள் இந்த திரைப்படத்துக்கு கிடைத்தன. இந்நிலையில், தொடர்ந்து 2-வது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை இனாரிட் பெற்று சாதனை படைத்துள்ளார். சிறந்த நடிகைக்கான விருது, ‘ரூம்’ திரைப்படத்தில் நடித்த பிரே லார்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளாக ஒரு அறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட தாய் மற்றும் மகன், தங்களது தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொண்டு, அந்த அறையில் இருந்து எப்படி வெளியேறுகிறார்கள் என்பதுதான், இந்த திரைப்படத்தின் மையக்கரு.
ஒன்றுக்கு 6

இதேபோன்று, சிறந்த துணை நடிகைக்கான விருது, ‘தி டேனிஷ் கேர்ள்’ திரைப்படத்தில் நடித்த அலிசியா விகாண்டருக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது ‘பிரிட்ஜஸ் ஆப் ஸ்பைஸ்’ திரைப்படத்தில் நடித்த இங்கிலாந்து நடிகர் மார்க் ரிலான்சுக்கும் வழங்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ரஷிய உளவாளியாக ரிலான்ஸ் நடித்துள்ளார். சிறந்த இயக்குனருக்கான விருதை ‘மேட் மேக்ஸ்:பியூரி ரோடு’ படத்தை இயக்கிய ஜார்ஜ் மில்லர் தவறவிட்ட போதிலும், சிறந்த எடிட்டிங், சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், ஆடை வடிவமைப்பு, மேக்அப், புரொடெக்‌ஷன் டிசைன் என 6 தொழில்நுட்ப பிரிவுகளில் அந்த திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
இந்திய வம்சாவளி

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது, ஹங்கேரிய மொழிப்படமான ‘சன் ஆப் சால்’ -க்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஆவணப்படத்துக்கான விருது ‘ஆமி’-க்கு வழங்கப்பட்டது. இதனை இயக்கிய ஆசிப் கபாடியா இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன் ஆவார். குறுங்கதை ஆவணப்பட பிரிவில், பாகிஸ்தான் இயக்குனர் ஷர்மீன் ஒபைதின், ‘எ கேர்ள் இன் தி ரிவர்: தி பிரைஸ் ஆப் பார்கிவ்னஸ்’ ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ‘தி ஹேட்புல் எய்ட்’ திரைப்படத்துக்கு இசை அமைத்த என்னியோ மோரிகோனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடலுக்கான விருது, ஜேம்ஸ்பாண்டின் ‘ஸ்பெக்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரைட்டிங்ஸ் ஆன் தி வால்’ பாடலுக்கு கிடைத்துள்ளது. இதற்காக பாடல் ஆசிரியர் சாம் ஸ்மித்துக்கு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் கலந்து கொண்டார்.

Leave a Reply