- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

7-வது நாளாக வேட்பாளர் நேர்காணல் அ.தி.மு.க.வில்

சென்னை, மார்ச் 28-
சென்னையில் நேற்று 7-வது நாளாக அ.தி.மு.க.வேட்பாளர் நேர்காணல் ஜெயலலிதா தலைமையில் நடந்தது.
தொகுதி வாரியாக…
தமிழக சட்டசபை தேர்தல் சூடுபிடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் வேட்பாளர் நேர்காணல் தீவிரம் அடைந்து வருகிறது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 26 ஆயிரத்து 174 பேர் விருப்ப மனு கொடுத்து இருந்தனர். இவர்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 6-ந்தேதி முதல் தொகுதி வாரியாக அழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார்.

7–-வது நாளான நேற்று, தேனி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விடுபட்ட தொகுதிகளுக்கு முதல்–-அமைச்சர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். இதில் கலந்து கொள்ள காலை 10 மணி முதலே, அ.தி.மு.க. நிர்வாகிகள் போயஸ்கார்டன் பகுதியில் குவிந்தனர். அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நேர்காணல் அழைப்பு கடிதத்தை சரிபார்த்து ஒவ்வொருவரையும் போயஸ் கார்டனுக்குள் அனுப்பி வைத்தனர்.
இன்றும் தொடர்கிறது
இதையடுத்து அவர்களிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார். அப்போது அவருடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அ.தி.மு.க. அலுவலக மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் நேற்று மதியம் தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் காரணம் எதுவும் இன்றி நேற்று மதியம் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 11.30 மணிக்கு தஞ்சை, நாகை மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும் என அ.தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply