- செய்திகள்

7 தமிழர்களின் கால் நூற்றாண்டு சிறைவாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? ராஜீவ்காந்தி கொலை வழக்கில்…

இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி  கொலை வழக்கில் கால் நூற்றாண்டு காலமாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வதில் தமிழக அரசு திட்டவட்டமான இறுதி முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கருணை மனுக்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினிக்கு தடா நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் 2000-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் வேண்டுகோளை ஏற்று நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளவன், முருகன், சாந்தன் ஆகியோர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால் இந்த கருணை 11 ஆண்டுகள் கழித்து 2011-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலால் நிராகரிக்கப்பட்டது.

இதனால் பேரறிவாளன் உள்ளிட்ட மூவருக்குமான தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தேதியாக 2011- செப்டம்பர் 9-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடி என்ற இளம்பெண் 3 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்தார். இது தமிழகத்தை உலுக்கியது.

ஆயுள் தண்டனையாக குறைப்பு

பின்னர் 2014-ம் ஆண்டு மிக முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. தற்போதைய கேரள ஆளுநரான சதாசிவம், அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். அவரது தலைமையிலான பெஞ்ச், கருணை மனுக்கள் ஆண்டுக் கணக்கில் ஜனாதிபதியால் கிடப்பில் போடப்பட்டதை காரணம் காட்டி தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 15 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து 2011 ஆகஸ்டு 30-ந் தேதி 3 தமிழரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க தமிழக சட்டசபையில் அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்தை நிறைவேற்றினார். இதனால் மூவரது தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இத்தீர்ப்பின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதியன்று பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதே வழக்கில் நளினி, பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரும் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வருகின்றனர்.

7 தமிழர்கள் விடுதலை?

ராஜீவ் கொலை வழக்கில் மொத்தம் 7 தமிழர்கள் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இதனால் இந்த 7 தமிழரையும் மாநில அரசு தமக்கு உள்ள அதிகாரத்தின்படி விடுதலையும் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை ஏற்று தமிழக அரசும் கடந்த ஆண்டு 7 தமிழரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளது. மத்திய அரசு 3 நாட்களுக்குள் முடிவைத் தெரிவிக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது இந்திய குற்றவியல் சட்டத்தின் 435-வது பிரிவின் கீழ் சி.பி.ஐ. விசாரித்த வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசின் ஆலோசனை தேவை எனக் கூறப்பட்டுள்ளதால் மாநில அரசும் மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டது.

மேல்முறையீட்டால் சிக்கல்

ஆனால் மத்திய அரசு நேரடியாக பதிலளிக்காமல் உச்சநீதிமன்றத்துக்கு ஓடிப் போய் மேல்முறையீடு செய்ய வழக்கு சிக்கலானது. இதனால் 7 தமிழர் விடுதலையில் சிக்கல் விழுந்தது. இவ்வழக்கில் மத்திய அரசின் வாதம் என்பது சிபிஐ விசாரித்த வழக்கில் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பதாகும்.
இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்றமும் கடந்த டிசம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் 435-வது பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும்போது மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும். அதே நேரத்தில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய இந்திய அரசியல் சாசனம் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் முடிவெடுத்தால் யாரும் தலையிட முடியாது என தெளிவாக கூறியது.

இருந்தபோதும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தடாலடியாக முடிவெடுக்காமல் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மத்திய அரசுக்கு 7 தமிழரை விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாக மீண்டும் கடிதங்களை அனுப்பியது.

1-ந் தேதி விசாரணை

ஆனால் மத்திய அரசு பதிலளிக்கவில்லை. இதனிடையே இவ்வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டு இதன் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 1-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில்தான் தமிழக அரசு இறுதி முடிவெடுத்துவிடுவோம் என்பதற்கு முன்னோட்டமாக தற்போது உச்சநீதிமன்றத்தில் டிசம்பர் மாத தீர்ப்பை முன்வைத்து ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில் 435-வது பிரிவின் கீழ் மாநில அரசு, மத்திய அரசிடன் அனுமதி கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மறுத்துள்ள தமிழக அரசு மத்திய அரசுடன் ஆலோசனைதான் நடத்தலாமே தவிர அனுமதி பெறத் தேவையில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதன்மூலம் மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் 435-வது பிரிவின் கீழான அதிகாரம் குறித்து இறுதி முடிவெடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி மத்திய அரசும் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் கருத்துக்கு எதிராக இருந்தால் கடைசி ஆயுதமாக அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவை பயன்படுத்தி ஒரு மாநில அரசு தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் 7 தமிழரை விடுதலை செய்வதாக அதிரடியாக தமிழக அரசு அறிவிக்கும். இந்த அறிவிப்பை உச்சநீதிமன்றமோ மத்திய அரசோ கேள்விக்குள்ளாக்கவே முடியாது.

எனவே 7 தமிழரும் கால் நூற்றாண்டு கால சிறைவாசத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுதலையாகி விடுவர் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Leave a Reply