- செய்திகள்

65-வது பிறந்தநாள்: விஜயகாந்த் கேக் வெட்டி கொண்டாடினார் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் வாழ்த்து…

சென்னை, ஆக.26-
தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் சென்னையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
65-வது பிறந்தநாள்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு நேற்று 64 வயது முடிந்து 65-வது வயது பிறந்தது. இதையொட்டி, சென்னை சாலிகிராம்த்தில் உள்ள தனது வீட்டில் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாடினார். விழாவையொட்டி, கட்சித்தொண்டர்கள், விஜயகாந்த வீடு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கொடி தோரணங்களை கட்டி இருந்தனர்.
பிறந்தநாளையொட்டி நேற்று காலையில் முதலில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடினார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜயபிரபாகரன் ஆகியோர் விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் குடும்பத்தினர் விஜயகாந்துக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொண்டர்கள் வாழ்த்து
விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதற்காக, அவரது வீட்டில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், தொண்டர்களே வரிசையில் நின்று ஒவ்வொருவராக விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மரக்கன்று
விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தே.மு.தி.க.கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விஜயகாந்த் வீட்டின் முன்பு நின்று மரக்கன்றுகளை வழங்கினர்.
கட்சி அலுவலகத்தில்
பின்னர் விஜயகாந்த் காலை 11 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அவருக்கு, கட்சித்தொண்டர்கள் விண் அதிர வாழ்த்து முழக்கமிட்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடினார்.
தலைவர்கள் வாழ்த்து
மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன் மற்றும் வீரபாண்டியன் உள்ளிட்டோர் விஜயகாந்துக்கு வாழ்த்து சொல்வதற்காக அங்கு வந்தனர். அவர்களை தே.மு.தி.க. நிர்வாகிகள் வரவேற்று அழைத்து சென்றனர்.
விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சிறிது நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
கேக் ஊட்டி…
பின்னர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான கேக்கை விஜயகாந்த் வெட்டினார். அந்த கேக்கை வைகோ-திருமாவளவன் ஆகியோர் விஜயகாந்துக்கு ஊட்டினர்.
அந்த கேக்கில் "இன்றைய வீழ்ச்சி, நாளைய ஆட்சி பீனிக்ஸ் பறவையே வாழ்த்தி வணங்குகிறோம்" என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.
பிறந்த நாளையொட்டி விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசியிலும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தே.மு.தி.க. பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, மோகன்ராஜ், மாவட்ட செயலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விஜயகாந்த் பிறந்தநாள் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் வன்னியரசு, செல்லத்துரை, இரா.செல்வம், வீர.ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply