- செய்திகள், விளையாட்டு

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா அரை இறுதிக்கு தகுதி

மொகாலி, மார்ச் 28-

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரை இறுதிக்குள் நுழைவது யார்? என்ற பரபரப்பான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்தது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 82 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

உலக கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்றின் (குரூப் 2) 31-வது போட்டியில் ஆஸ்திரேலியா- இந்தியா பலப்பரீட்சை நடத்தின. மொகாலி ஐ.எஸ். பிந்த்ரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பகல்- இரவு ஆட்டமாக நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாசை வென்றது.

கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக காவஜா, ஆரோன் பிஞ்ச் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஒவரை நெகரா வீசினார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா 22 பந்துகளில் 50 ரன்களை கடந்தது.
இந்த நிலையில் 26 ரன்கள் (6 பவுண்டரி) எடுத்திருந்த நிலையில் காவஜா நெக்ரா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த வந்த வார்னர் 6 ரன்னிலும், கேப்டன் ஸ்மித் 2 ரன்னிலும் வரிசையாக நடையை கட்டினர்.
இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரின் முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பாண்ட்யா 2 விக்கெட்களும், நெக்ரா, பூமரா, அஸ்வின், யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் கண்டது.
தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், ரோகித் சர்மா இறங்கினர். 13 ரன்கள் (1 பவுண்டரி 1 சிக்சர்) நிலையில் தவான் அவுட் ஆனார். இதையடுத்து கோலி இறங்கினார். இந்த நிலையில் 12 ரன்னில் ரோகித் சர்மாவும், 10 ரன்னில் ரெய்னாவும் நடையை கட்டினர். இதனால் இந்தியா ஒருகட்டத்தில் திணறியது. இந்நிலையில் யுவராஜ் சிங் இறங்கினார்.
அடித்து ஆடிய அவர் சதை பிடிப்பால் அவதிப்பட்டார். 21 ரன்கள் (1 சிக்சர், 1 பவுண்டரி) சேர்த்த அவர், பவுல்னெர் பந்து வீச்சில் வாட்சனிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். 16 ஓவரின் முடிவில் இந்தியா 114 ரன்கள் சேர்ந்திருந்தது. வெற்றிக்கு 24 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்டது.
கேப்டன் டோனி, விராட் களத்தில் நின்றனர். ஆட்டத்தின் 17-வது ஓவரை வாட்சன் வீசி 8 ரன்கள் வழங்கினார். பவுல்னெர் வீசிய 18-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய கோலி, 3-வது பந்தை சிக்சருக்கு தெறிக்க விட்டார். அந்த ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டது.
இதையடுத்து வெற்றிக்கு 12 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது. கோட்லர் நைல் வீசினார். அந்த ஓவரில் மட்டும் விராட் கோலி 4 பவுண்டரிகள் அடித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் ேடானி எதிர்கொண்டார். பவுல்னெர் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது. 82 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
————-

Leave a Reply