- செய்திகள், மாவட்டச்செய்திகள், வணிகம்

6 வர்த்தக தினங்களுக்கு பிறகு கரடியின் பிடியில் இருந்து தப்பிய காளை…

புதுடெல்லி, டிச.11:-
தொடர்ந்து 6 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள் நேற்று முன்னேற்றம் கண்டன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 216 புள்ளிகள் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 71 புள்ளிகள் உயர்ந்தது.
வாய்ப்பு
முந்தைய 6 வர்த்தக தினங்களாக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டு இருந்ததால் பல முன்னணி நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா ஸ்டீல் உள்பட பல முன்னணி பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர். இதனால் நேற்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது.
மும்பை பங்குச் சந்தையில் எரிசக்தி, ரியல் எஸ்டேட், மின்சாரம், உலோகம், தொலைத்தொடர்பு, பொறியியல் சாதனம், நுகர்வோர் சாதனம் உள்பட பல துறைகளின் குறியீட்டு எண்கள் ஏற்றம் கண்டன.
என்.டி.பி.சி.
சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, என்.டி.பி.சி., எச்.டி.எப்.சி., பஜாஜ் ஆட்டோ, சிப்லா, கெயில், இன்போசிஸ் உள்பட 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தன. மகிந்திரா அண்டு மகிந்திரா, லுப்பின், டாட்டா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி, பீ.எச்.இ.எல்., இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட 11 நிறுவன பங்குகளின் விலை சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 216.27 புள்ளிகள் உயர்ந்து 25,252.32 புள்ளிகள் நிலை கொண்டது.
நிப்டி
தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் நிறைவில் நிப்டி 70.80 புள்ளிகள் அதிகரித்து 7,683.30 புள்ளிகளில் முடிவுற்றது.

Leave a Reply