- செய்திகள்

5 ஆண்டுகளில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்…

சென்னை, ஜூலை.29-
5 ஆண்டுகளில் தமிழகத்தில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
பட்ஜெட் விவாதம்
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதம் நடந்தது. அப்போது சட்டம்- ஒழுங்கு பற்றி தி.மு.க. எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபு பேசினார்.
அதற்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
குற்றங்கள் குறைவு
முதல்-அமைச்சர் அம்மா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகச்சிறப்பாக உள்ளது. குற்றச்செயல்கள் குறைந்து வருகிறது.
காவல் துறையை சுதந்திரமாக செயல்படவிட்டுள்ளதால் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 2010-ம் ஆண்டில் மொத்த குற்ற வழக்குகள் எண்ணிக்கை 23,068. அ.தி.மு.க. ஆட்சி வந்த பிறகு 2011-ம் ஆண்டு 22,809 ஆக அது குறைந்தது. 2012-ம் ஆண்டு 20,391 ஆகவும், 2013-ல் 21,721 ஆனது.
2014-ல் 21,110 ஆக குறைந்தது. கடந்த ஆண்டு 19,931 ஆகவும் இருந்தது. இந்த ஆண்டு இதுவரை 9,930 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகை சமூக சூழ்நிலை போன்றவற்றால் குற்றம் நடப்பது தவிர்க்க முடியாது. ஆனால் ஜெயலலிதா குற்றங்களை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவாதி கொலையில்..
சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலையில் குற்றவாளி விரைவில் கண்டு பிடிக்கப்பட்டார்.
அது போல பெரியமேட்டில் நடந்த கொலை, கோடம்பாக்கத்தில் நடந்த வக்கீல் கொலையிலும் போலீசார் திறமையாக துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் தற்போது அம்மா ஆட்சியில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது.
இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply