- செய்திகள்

3 குழந்தைகளை கொலை செய்து தந்தை தற்கொலை நெல்லை அருகே பரபரப்பு சம்பவம்…

நெல்லை, ஆக.19- நெல்லை அருகே 3 குழந்தைகளை கொலை செய்து தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கட்டிட தொழிலாளி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தை அடுத்த தருவை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேகலா(26). இவர்களது மகள்கள் முத்துச்செல்வி(8), காவ்யா(6), ஆர்த்தி(3). முத்துச்செல்வி 3 ம் வகுப்பும், காவ்யா 1 ம் வகுப்பும், ஆர்த்தி ப்ரீ கேஜி யும் படித்து வந்தனர்.
ராஜசேகருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்திவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் பொழுதை கழித்து வந்துள்ளார். மனைவி மேகலா பீடி சுற்றி குடும்பத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில் ராஜசேகர் அடிக்கடி மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்தார். அவர் பணம் கொடுக்காததால் அவரை தாக்கி சித்ரவதை செய்து வந்துள்ளார். நேற்று மாலை வழக்கம் போல மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

குழந்தைகள் கொலை
அதற்கு மேகலா மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர் மேகலாவை சரமாரியாக அடித்து உதைத்தார். இதனால் மேகலா கோபித்துக்கொண்டு அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். போதையில் இருந்த அவருக்கு மனைவி மீதான ஆத்திரம் தீரவில்லை.

இதனால் அவர் மீதான கோபத்தை குழந்தைகள் மீது காண்பித்தார். இரவு குழந்தைகள் 3 பேருக்கும் வி‌ஷத்தை குடிக்க கொடுத்தார். மூத்த மகள் முத்துச்செல்வி வி‌ஷத்தை குடிக்க மறுத்து பிடிவாதம் செய்தாள். அவளுக்கு ராஜசேகர் வலுக்கட்டாயமாக வாயில் வி‌ஷத்தை ஊற்றினார்.
இதை பார்த்த காவ்யாவும் குடிக்க மறுத்து அழுதாள். இதனால் அவளை ராஜசேகர் கழுத்தை நெரித்து வாயில் வி‌ஷத்தை ஊற்றினார். பின்னர் 3-வது குழந்தை ஆர்த்தியை கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்தார். இதில் குழந்தைகள் 3 பேருமே சிறிது நேரத்தில் பிணமானார்கள்.

தீக்குளிப்பு
இதைதொடர்ந்து  நேற்று  அதிகாலை ராஜசேகர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு 3 குழந்தைகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், ராஜசேகர் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடுவதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜசேகரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட குழந்தைகள் உடலை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு விக்ரமன் சம்பவ இடத்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

சாவு
இதற்கிடையே பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகர் பலனின்றி பரிதாபமாக இறந்தார். பெற்ற குழந்தைகளை கொன்று விட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply