- ஆன்மிகம், செய்திகள், மாநிலச்செய்திகள், விருதுநகர்

28 கிலோ தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்ககோபுரம் கும்பாபிஷேகம்

விருதுநகர்,  ஜன.21-
வில்லிபுத்தூரில் 28 கிலோ தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட ஆண்டாள் கோவில்  தங்கக்கோபுரம் மற்றும் ரெங்கமன்னார் சன்னதி கோபுர கும்பாபிஷேகம் நேற்று  கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
28 கிலோ தங்கம்
விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரில் புகழ்பெற்ற வைணவத்தலமான ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டாள் கருவறை கோபுரம் 28  கிலோ தங்கத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரெங்கமன்னார் கோபுரம்,  கருடாழ்வார் கோபுரம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம்  நடத்துவதற்காக கடந்த 5 நாட்களாக மிகப்பெரிய அளவில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு  தொடர்ச்சியாக ஹோமங்கள், பூஜைகள் நடத்தப்பட்டது.

தினமும் ஆண்டாள்,  ரெங்கமன்னாருடன் எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தங்க கோபுர கும்பாபிஷேகம்

முக்கிய நிகழ்ச்சியான தங்கக்கோபுர கும்பாபிஷேகம் மற்றும்  ரெங்கமன்னார் கோபுர கும்பாபிஷேகம் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. பத்ரி நாராயணபட்டர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட  பட்டாச்சாரியார்கள் கும்பாபிஷேக ஹோமத்தில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள்  செய்தனர்.
தங்கக்கோபுர கும்பாபிஷேகத்தையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் நேற்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறை விடப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கும்பாபிஷேகத்தைக் காண விருதுநகர் மாவட்டம்  மட்டுமல்லாமல், நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை,  பகுதிகளிலிருந்தும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
கும்பாபிஷேகத்தின் போது  கோபுரங்களில் தெளிக்கப்படும் புனிதநீர் பக்தர்கள் மீதும் தெளிப்பதற்காக  நவீன கருவி வரவழைக்கப்பட்டு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

அன்னதானம்

வில்லிபுத்தூர் நகர் முழுவதும்  குவிந்த பக்தர்களுக்கு பல இடங்களில் தொண்டு நிறுவனங்கள் சார்பாக அன்னதானம்  வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்ததும் பகல் 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்தியாவிலேயே  பெரியதாக உருவாக்கப்பட்டுள்ள தங்கக் கோபுரத்தை பொதுமக்கள் அனைவரும் அருகில்  சென்று பார்ப்பதற்கு கோவில் நிர்வாகத்திலிருந்து சிறப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தது. இதனால் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும்  ஆண்டாள் தங்கக்கோபுரத்தை அருகில் சென்று பயபக்தியுடன் வணங்கினார்கள்.

விழாவை முன்னிட்டு மதுரை போலீஸ் டி.ஐ.ஜி. ஆனந்தக்குமார் சோமானி, விருதுநகர் மாவட்ட சூப்பிரண்டு  அரவிந்தன் தலைமையில், 12 டி.எஸ்.பி.க்கள், 40 இன்ஸ்பெக்டர்கள், 1500 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply