- செய்திகள், வணிகம்

2016-17-ம் நிதியாண்டின் முதல் நிதிக்கொள்கை இன்று வெளியீடு கடனுக்கான வட்டி 0.50 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு

புதுடெல்லி, ஏப். 5:-

2016-17-ம் நிதியாண்டின் முதல் நிதிக்கொள்கை அறிவிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இன்று வெளியிடுகிறார். இதில் கடனுக்கான வட்டி 0.50 சதவீதம் குறைப்படலாம் என தொழில்துறையினர், நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர்.

இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதையடுத்து, 2016-17ம் நிதியாண்டின் முதல் நிதிக்கொள்கை அறிவிப்பை கவர்னர் ரகுராம்ராஜன் இன்று வௌியிடுகிறார்.

நாட்டின் சில்லரை பணவீக்கம் பிப்ரவரி மாத கணக்கின்படி 5.18 சதவீதமும், மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து 16 மாதங்களாக மைனஸ் வீதத்தில் இருந்து வருகிறது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவுக்குள் பணவீக்கம் இருப்பதையே காட்டுகிறது.

அதுமட்டுமல்லாமல், தொழில்துறையின் உற்பத்தி செயல்பாடு தொடர்ந்து 3-வது மாதமாக எதிர்மறையாக செல்கிறது. சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியும் பன்தங்கி இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல், ரிசர்வங்கியின் புதிய வட்டிவீத முறையின்படி, மத்தியஅரசும் 1-ந்தேதி முதல் சிறுசேமிப்புகளுக்கு வட்டிவீதத்தை குறைத்துள்ளது. ஒரு விதத்தில் சேமிப்புக்கு வட்டிக்குறைப்பு செலவீனத்துக்கானதாக இருந்தபோதிலும், கடனுக்கான வட்டிக்குறைப்பு இல்லை.

இந்தநிலையில், நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, தொழில்துறை வளர்ச்சி மந்தம், ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிசர்வ்வங்கி கடனுக்கான வட்டியை குறைக்கும் என எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது.

இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், “ வட்டிகுறைப்பை ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். வட்டி குறைப்பு இருந்தால், அது ஒவ்வொருதரப்பினருக்கும் உதவியாக இருக்கும். சிறந்த பொருளாதார வளர்ச்சி தேவை என்றால், இப்போது வட்டி குறைப்பு அவசியம் '' என்று அவர் தெரிவித்துள்ளார்.

வரும் நிதிக்கொள்கை அறிவிப்பில் ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்கும் என எதிர்பார்க்கிறோம் என மேலும், பேங் ஆப் மஹாராஷ்டிரா தலைவர் சுஷில் முகோத், மற்றும் வர்த்தக, தொழில்துறை கூட்டமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது.

மேலும், யூனியன் வங்கியின் தலைவர் அருண் திவாரி, ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா ஆகியோரும் நிதிக்கொள்கை அறிவிப்பில் 0.25 சதவீதம் வட்டி குறைப்பு இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்போது நாட்டில் உள்ள தொழில்துறை சூழல், வளர்ச்சிக்குறைவு, பொருளாதார வளர்ச்சி மந்தநிலை ஆகியவற்றை சீராக்க ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையில் கடனுக்கான வட்டியை 0.50 சதவீதம் குறைக்க வேண்டும் என தொழில்துறையினர், நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply