- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

2009-ம் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட மருத்துவமனைகளில் சாய்தள பாதை அமைக்க வேண்டும்

சென்னை, மார்ச். 8- 2009-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட மருத்துவமனைகளில் சாய்தள பாதை அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு
சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஜவகர்லால் பொது நலன் கருதி ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். தமிழகத்தில் உள்ள அடுக்குமாடிகள் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்றவற்றில் முறையாக தீ பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வில்லை என்றும், நோயாளிகள் வெளியில் சென்று வர சாய்தள பாதைகள் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கிற்கு ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யாததால் தமிழக சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், இவர்கள் நேரில் ஆஜராகவும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.
நீதிபதிகள் உத்தரவு
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை செயலாளர், சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆகியோர் ஆஜரானார்கள். இதன் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பிரதிவாதிகள் தங்கள் பதில் மனுவை ஒருவருக்கொருவர் கொடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இந்த வழக்கில் ஒருமித்த கருத்தை எடுக்க முடியும். 2009-க்கு முன்பு கட்டப்பட்ட மருத்துவமனை மற்றும் கல்லூரி கட்டிடங்களாக இருந்தாலும் அந்த கட்டிடங்களில் சாய்வு தள பாதையை அமைக்க வேண்டும். ஒருவேளை இட வசதி இல்லை என்றால் இதற்காக மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்.
பதில் மனு
இந்த வழக்கில் மத்திய அரசின் மாற்று திறனாளிகள் துறை முதன்மை செயலாளராயும் சேர்க்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வருகிற ஏப்ரல் 21-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply