- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

200 அடி உயர செல்போன் டவரில் ஏறி சப் – இன்ஸ்பெக்டர் தற்கொலை மிரட்டல்

பூந்தமல்லி,ஏப்.6- 200 அடி உயர செல்போன் டவரில் ஏறி சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இட மாற்றம்
சென்னை மதுரவாயல் காவலர் குடியிருப்பில் சி.பிளாக் கீழ்தளத்தில் வசிப்பவர் அரி(வயது48).  மதுரவாயல் காவல் நிலையத்தில் காவல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரி காரில் செல்லும் போது எம்.எம்.டி.ஏ பகுதியில் ஆட்டோ ஒன்று அவரது காரை உரசியதால் ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாக தாக்கினார். காயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் அரி மீது புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறை உயர்அதிகாரிகள் அரியை திருவேற்காட்டிற்கு பணியிடை மாற்றம் செய்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவரை பற்றி ஒரு செய்தி வாட்சாப்பில் வீடியோவாக வெளியானது. இந்த வீடியோவை பார்த்த காவல்துறை உயர்அதிகாரிகள் அரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அரி  மதுரவாயல் காவலர் குடியிருப்பில் உள்ள 200அடி உயரம் கொண்ட செல்போன் டவரில் ஏறினார். டவரின் உச்சிக்கு  சென்று அங்கு நின்றபடி நான் கீழே குதிக்க போகிறேன் எனக் கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது பற்றி தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் வந்து அரியை இறங்கும்படி வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை உயர்அதிகாரிகள் செல்போன் மூலம் அரியை தொடர்பு கொண்டு நைசாக பேசி டவரில் இருந்து கீழே இறங்க வைத்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Leave a Reply