- உலகச்செய்திகள், செய்திகள், விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

நாக்பூர், மார்ச் 8:-
விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் இன்று உலகம்  முழுவதும் பேசப்படும் விளையாட்டாக கிரிக்கெட்தான் திகழ்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் விளம்பர நிறுவனங்களிலும் ஏகப்பட்ட கிராக்கி.

ஆங்கிலேயர்கள் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டாலும் அவர்கள் விட்டுச் சென்ற மிச்ச சொச்சங்களில் கிரிக்கெட் மட்டும் இந்தியாவில் இன்றளவும் கொடிகட்டி பறக்கிறது.

அப்படிப்பட்ட பேரும் புகழும் பெற்ற அந்த விளையாட்டின் 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இன்று கோலகலமாக தொடங்குகிறது.

16 அணிகள் பங்கேற்கும் 6-வது 20 ஓவர் உலக கோப்பையின் பிரதான ஆட்டம் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. நாக்பூரில் நடக்கும் அந்தப் போட்டியில் துவக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் களம் காண உள்ளன.

முன்னதாக, முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. அதாவது `ஏ' பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து,  அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. `பி' பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டத்தின் முடிவில் அந்தந்த பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 10 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர் 10 பிரிவில் `ஏ' பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் `பி' பிரிவில் முதலிடம் அணி இடம் பெறும். `பி'  பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுடன் `ஏ' பிரிவில் முதலிடம் இடம் பிடிக்கும் அணி இடம் பெறும்.

இதைத் தொடர்ந்து பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறத் தொடங்கும். முன்னதாக இன்று நடைபெற உள்ள தகுதிச் சுற்றுப் போட்டியில் நாக்பூரில் ஹாங்காங்-ஜிம்பாப்வே அணிகளும் ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகளும் மோதுகின்றன.

பரிசுத் தொகை 3.8 கோடி ரூபாய்

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூபாய் 3.8 கோடி பரிசளிக்கப்பட உள்ளது. இது 2014-ம் ஆண்டு பட்டம் வென்ற அணிக்கு அளிக்கப்பட்டதைவிட 86 சதவீதம் அதிகமாகும்..

27 நாள்கள் போட்டி

27 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 35 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. போட்டிகள் நாக்பூர், பெங்களூரு, மும்பை, தர்மசாலா, கொல்கத்தா, மொஹாலி, டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.

அரை இறுதிப் போட்டிகள் முறையே 30, 31-ம் தேதிகளில் டெல்லி மற்றும் மும்பையில் நடைபெற உள்ளன. இறுதிப் போட்டி ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்

இந்தப் போட்டியில் இந்தியா தனது துவக்க ஆட்டத்தில் மார்ச் 15-ம் தேதி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் மார்ச் 19-ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது.

இந்தப் போட்டியின் நடப்புச் சாம்பியன் இலங்கையாகும். ஆனால் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டியின் மூன்று ஆட்டங்களில் இந்தியா 2-1 என்ற கணக்கில் இலங்கையை வென்றுள்ளது. அத்தோடு மட்டுமல்ல வங்கதேசத்தில் நடந்த ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாதான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அத்தோடு மட்டம் அல்ல இந்தப் போட்டியில் இந்தியா 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த ஆண்டில் இதுவரை இந்தியா 11 இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்று 10 ஆட்டங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதும் ஒரு கூடுதல் பலமாகும். ஆக எந்த வகையிலும் இந்தியாவின் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆக, சுமார் ஒரு மாத காலத்துக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து வேட்டை காத்திருக்கிறது.

Leave a Reply