- செய்திகள், மாநிலச்செய்திகள்

2-வது இறுதிக் கட்ட தேர்தலிலும் விறுவிறுப்பு அசாமில் 82 சதவீத ஓட்டுப்பதிவு

கவுகாத்தி, ஏப்.12-

அசாமில் நேற்று நடைபெற்ற 2-வது இறுதி கட்ட தேர்தலிலும் விறுவிறுப்பான 82.21 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்த பின்னரும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டு போட்டனர்.

5 மாநில சட்டபை தேர்தல்களில், அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முதலில் ஓட்டுப்பதிவு தொடங்கியது.

விறு விறுப்பு

மொத்தம் 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில், முதல் கட்டமாக, கடந்த 4-ந்தேதி 65 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில், மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவில் 82.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

நேற்று 2-வது இறுதி கட்டமாக மீதி உள்ள 61 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டத்தைப்போல், நேற்றும் தொடக்கத்தில் இருந்தே ஓட்டுப்பதிவு விறு விறுப்பாக இருந்தது. முன்னாள் பிரதமர் மன்ேமாகன்சிங், டெல்லியில் இருந்து அசாம் சென்று, திஸ்பூர் தொகுதி வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

வன்முறை

ஒருசில சிறிய வன்முறை சம்பவங்களைத் தவிர, அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சாய்கான் வாக்குச்சாவடியில் மத்திய போலீஸ் படை வீரர் ஒருவருக்கும் ஓட்டளித்துவிட்டு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குச்சாவடிக்குள் விட்டு வந்த தனது குழந்தையை அழைத்து வருவதற்காக அந்தப் பெண் மீண்டும் உள்ளே செல்ல முயன்றபோது தடுக்கப்பட்டதால் போலீசாருக்கும் வாக்காளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூடு

மோதலில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் யாருக்கும் காயம் இல்லை. பரபெடா மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் போலீசாருடன் நடைபெற்ற மோதலில், 80 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மத்திய பாதுகாப்பு படையினர் இருவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இதுபோன்ற ஒரு சில சிறிய வன்முறை சம்பவங்களைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது.

82 சதவீத ஓட்டுப்பதிவு

காலையில் இருந்து மாலை வரை ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த பிறகும், அதற்கு முன்பாக வாக்குச்சாவடி வளாகத்துக்கு வந்தவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் நீண்ட வரிசையில் சென்று இரவு வரை தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். மொத்தத்தில் 82.21 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக, கணக்கிடப்பட்டு உள்ளது.

பிரபுல்ல குமார் மகந்தா

நேற்றைய ஓட்டுப்பதிவின்போது களத்தில் இருந்த 525 வேட்பாளர்களில், காங்கிரசை சேர்ந்த 3 அமைச்சர்கள், பா.ஜனதா கூட்டணி கட்சியான அசாம் கணபரிஷத் கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான பிரபுல்லகுமார் மகந்தா மற்றும் பா.ஜனதா தேசிய செய்தித் தொடர்பாளர் சித்தார்த்த பட்டாச்சார்யா ஆகியோர் முக்கியமானவர்கள்.

நேரடி போட்டி

அசாம் மாநிலத்தில், காங்கிரசுக்கும் பா.ஜனதா கூட்டணிக்கும் இடையே நேரடி பலப்பரீட்சை நடக்கிறது. காங்கிரசுக்கு கடும் போட்டியை அளித்த பா.ஜனதா கூட்டணியில், அசாம் கணபரிஷத் மற்றும் போடோ மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

காங்கிரஸ் சார்பில், 4-வது முறையாக தருண் கோகாய் முதல்-அமைச்சர் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார். பா.ஜனதா முதல்-அமைச்சர் வேட்பாளராக, தற்போது மத்திய அமைச்சராக பதவி வகித்து வரும் சர்வானந்தா சோனோவால் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

மே 19-ல் ஓட்டு எண்ணிக்கை

கோகாய் மற்றும் சோனோவால் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், முதல் கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.

அசாம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டாலும், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பிறகு, அடுத்த மாதம் (மே) 19-ந்தேதிதான் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

——————–

(செய்திக்குள் பாக்ஸ்)

தேர்தல் முடிவுக்கு 1 மாதத்துக்கு

மேல் காத்து இருக்க வேண்டும்

அசாம் மாநிலத்தில் இரு கட்ட தேர்தலும் நடந்து முடிந்து விட்டது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற 4 மாநிலங்களில் மே மாதம் 16-ந்தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால், 5 மாநிலங்களிலும் தேர்தல் முடிவடைந்த பிறகுதான் ஒரே நாளில் (மே 19-ந்தேதி) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். எனவே, அசாம் மாநில மக்கள் தேர்தல் முடிவை தெரிந்து கொள்வதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் காத்து இருக்க வேண்டும்.

அசாமில், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கூட்டணிக்கு இடையே கடும் போட்டி இருந்தாலும், பா.ஜனதா கூட்டணிக்குத்தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply