- செய்திகள், தருமபுரி, மாவட்டச்செய்திகள்

2 பெண்கள் உள்பட 6 பேர் பலி தர்மபுரி அருகே, கார்-லாரி மோதல்

தர்மபுரி, மார்ச் 28-
தர்மபுரி அருகே நேற்று மாலை கார்- லாரி பயங்கரமாக மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
காரின் டயர் வெடித்தது

கர்நாடக மாநிலம் பெங்களூர் பெலந்தூர் பகுதியை சேர்ந்தவர் அவினேஸ் குமார். இவரது மனைவி சமேகா (வயது 28). இந்த தம்பதியினரும் மற்றும் அகன்ஷாசிங், அவரது மனைவி (பெயர் தெரியவில்லை), ராமன்பீப் சிங், அவரது மனைவி நவனின்கூர் ஆகிய 6 பேர் தர்மபுரியில் இருந்து பெங்களுர் நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அந்த கார் நேற்று மாலை 4 மணி அளவில் தர்மபுரியை அடுத்த காரியமங்களம் கெரகோடஅள்ளி நான்குவழி சாலையில் சென்ற போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது.

இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரை தாண்டிச் சென்று எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.  இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. லாரியின் முன் பக்கமும் பலத்த சேதம் அடைந்தது.
6 பேர் பலி

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுபோல் லாரி டிரைவரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாஜ்பேக் என்பவரும் உயிரிழந்தார். காரில் பயணம் செய்த இளம்பெண் மேகா படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரியமங்களம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து காரியமங்களம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படம் உள்ளது

Leave a Reply