- செய்திகள், விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோர் உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது

மிர்பூர், பிப்.10:-
19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் நேற்று இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே அரை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றை எட்டியுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரிஷப் பந்தும் கேப்டன் இஷான் கிஷணும் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் மிகவும் சுமாரகவே விளையாடினர். முன்னதாக இந்திய அணி 23 ரன்களை எடுத்த நிலையில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். இவர் 28 பந்துகளில் 14 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். இவருக்குப் பின் அன்மோல் பிரீத் சிங் களம் புகுந்தார்.

இவரும் கிஷணும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு மேலும் 4 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் ஆட்டமிழந்து வெளியேறினார். இவர் 25 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். தட்டுத் தடுமாறிய இந்திய அணியை  அடுத்து வந்த சர்பராஸ் கானும் அன்மோல் பிரீத் சிங்கும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும் அளவுக்கு அழைத்துச் சென்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் எடுத்தனர். இந்த நிலையில் சர்பராஸ் கான் ஆட்டமிழந்தார். இவர் 59 ரன்கள் எடுத்தார். இவர் 71 பந்துகளில் 6 பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்தார். கான் ஆட்டமிழந்ததும் வாஷிங்டன் சுந்தர் களம் கண்டர். சர்பராஸ் இந்தப் போட்டியில் அடித்துள்ள அரை சதத்தையும் சேர்த்து இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 4 அரை சதத்துக்கு மேலான ரன்களை அடித்துள்ளார்.

சுந்தரும் சிங்கும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் அன்மோல் பிரீத் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இவர் எடுத்ததுதான் அதிகபட்ச ரன்களாகும். இவர் 92 பந்துகளில் 72 ரன்களைக் குவித்தார். இவர் அடித்த இந்த ரன்களில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். வாஷிங்டன் சுந்தரும் ஓரளவுக்கு நின்று நிதானித்து ஆடி 43 ரன்களைச் சேர்த்தார். பின்னர் வந்தவர்களில் அர்மான் ஜாபர் 29 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து 268 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் எடுத்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இலங்கை அணியில் மென்டீஸ் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக ஆஷன் 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் மயங் தாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியை அடுத்து இந்தியா அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக அன்மோல் பிரீத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஏற்கெனவே இந்தியா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஏற்கெனவே ஒரு முறை இறுதிப் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. இந்த நிலையில் இறுதிப் போட்டியில் வங்கதேசம்-மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் அணியுடன் இந்தியா மோத உள்ளது,

Leave a Reply