- செய்திகள், மாவட்டச்செய்திகள்

13-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு இளைஞர்கள்-பெண்களுக்கு முக்கியதும்…

சென்னை, ஏப்.11-
13-ந் தேதி தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அதில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிக வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

176 தொகுதியில் போட்டி

சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு விட்டது. பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும், சமூக சமத்துவ படை கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாய தொழிலாளர் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு 58 தொகுதிகள் கொடுத்தது போக 176 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
இதற்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்த பட்டியல்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் (அல்லது) துறைமுகம் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலும், மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

13-ந் தேதி வெளியீடு

இது தவிர புதுமுகங்கள் அதிகம் பேர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இளைஞரணியினர், மகளிர் அணியினரும் கணிசமான அளவு இடம் பெறுகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களில் 40 பேர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.
கூட்டணியில் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தி.மு.க.வில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு 10 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கிறிஸ்தவ பிரதிநிதிகள், பேராயர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் தி.மு.க.வில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தி.மு.க. போட்டியிடும் 176 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் கருணாநிதி வருகிற 13–-ந் தேதி (புதன் கிழமை) வெளியிடுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு தி.மு.க. தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கும்.

Leave a Reply