- செய்திகள், வணிகம்

105 கோடியை தாண்டியது செல்போன், லேண்ட் லைன் இணைப்புகள் டிராய் தகவல்

புதுடெல்லி, ஏப்.27:-

கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி, நம் நாட்டில் செல்போன், லேண்ட் லைன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 105 கோடியை தாண்டி விட்டது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு

டிராய் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது:-

2016 பிப்ரவரி இறுதியில் தொலைத்தொடர்பு இணைப்புகளின் (செல்போன், லேண்ட் லைன்) எண்ணிக்கை 105.18 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஜனவரி மாத இறுதியில் இது 104.32 கோடியாக இருந்தது. செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம். அந்த மாதத்தில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 101.79 கோடியில் இருந்து 102.66 கோடியாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் லேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை 2.53 கோடியில் இருந்து 2.52 கோடியாக குறைந்துள்ளது.

லேண்ட் லைன் இணைப்பில் அதிக பங்களிப்பை அரசு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களின் மொத்த சந்தை பங்களிப்பு 80.91 சதவீதமாக உள்ளது. அதே சமயம், செல்போன் இணைப்பில் தனியார் நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. நம் நாட்டில் உள்ள மொத்த செல்போன் இணைப்புகளில் 91.38 சதவீதத்தை தனியார் நிறுவனங்களே வழங்கியுள்ளன.

இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

Leave a Reply