BREAKING NEWS

1000 ஆண்டு பழமையான தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா

மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட 1,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான தஞ்சைப்பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா, 23 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கு விழா
தஞ்சாவூர் பெரியகோயிலில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் புதன்கிழமை (பிப்.5) காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழா ஜன. 27ஆம் தேதி பூஜை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், முதல்கால யாக பூஜைகள் பிப். 1ஆம் தேதி மாலை தொடங்கியது.
இதையடுத்து, பிப். 2ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், திங்கள்கிழமை (பிப்.3) காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை ஆறாம் கால யாக பூஜைகளும், மாலையில் ஏழாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.
தீபாராதனை
இதைத்தொடர்ந்து, புதன்கிழமை (பிப்.5) அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை, ஹோமம், நாடி சந்தானம் ஆகியவை நடைபெறவுள்ளன. பின்னர், காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புனித நீர் கொண்டு குடமுழுக்கு, 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றது.
பஞ்சமூர்த்திகள்
திருவீதியுலா
கோயிலில் குழுமியிருந்த ஏராளமான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ விண்ணை முட்ட முழக்கமிட்டனர். குடமுழுக்கு நடைபெற்றபோது அனைத்து அறிவிப்புகளும் தமிழிலேயே நடைபெற்றன. மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெற்றது. யாக பூஜைகள் தொடங்கியதிலிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. தொடக்க நாளான பிப். 1ஆம் தேதி 50,000 பேரும், இரண்டாம் நாளான பிப். 2ஆம் தேதி ஒரு லட்சம் பேரும், மூன்றாம் நாளான திங்கள்கிழமை ஒரு லட்சம் பேரும், செவ்வாய்க்கிழமை சுமார் ஒரு லட்சம் பேரும் என மொத்தம் ஏறத்தாழ 3.50 லட்சம் பேர் பங்கேற்றதாக போலீசார் தெரிவித்தனர். எனவே, புதன்கிழமை ஏறத்தாழ 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாக்கோலம்
குடமுழுக்கு விழாவைக்காண தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். மேலும், கனடா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் குடமுழுக்கைக் காணவந்தனர். இதனால் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் தஞ்சை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
இதையொட்டி, இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், கோயிலிலும், கோயிலைச் சுற்றிலும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்ட போலீசாரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
நகருக்குள் 175 வேன்கள் இயக்கம்
பக்தர்களின் வசதிக்காக மாநகரில் 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் மக்களின் வசதிக்காக 225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், புதிய பேருந்து நிலையம், கரந்தை தற்காலிகப் பேருந்து நிலையம் மட்டுமல்லாமல், பட்டுக்கோட்டை சாலையில் புதுப்பட்டினத்தில் தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோண வழித்தடப் பேருந்துகள் பள்ளியக்ரஹார புறவழிச்சாலை வரையும், நாகை வழித்தடப் பேருந்துகள் புறவழிச்சாலை பெஸ்ட் பள்ளி வரையிலும், பட்டுக்கோட்டை வழித்தடப் பேருந்துகள் பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வரையிலும் இயக்கப்படவுள்ளன. இதேபோல, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி வழித்தடப் பேருந்துகள் வழக்கம்போல புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன.
இப்பகுதிகளிலிருந்து ரயிலடி வரை 175 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக பள்ளி, கல்லூரிப் பேருந்துகள், வேன்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படவுள்ளன. பக்தர்கள் எளிதாக கோயிலுக்குச்செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. ஏற்கெனவே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.முதியவர்களுக்காக 30 பேட்டரி வாகனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக 300-க்கும் அதிகமான சக்கர நாற்காலிகள் இயக்கப்படவுள்ளன.
பக்தர்கள் பரவசம்
பெரிய கோயில் குடமுழுக்கின் போது கருடன் பறந்ததால் பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து, காலை 9.30 மணிக்கு பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா தொடங்கியது. குடமுழுக்கு நடைபெற்றபோது, கலசத்தின் மேலே கருடன் வட்டமிட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அப்போது, ‘கருட பகவான் வந்துவிட்டான்’ என ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். இதையடுத்து, அங்கு குழுமியிருந்த பக்தர்கள், கருட பகவானை வான் நோக்கி வழிபட்டனர். பெரிய கோயில்களின் குடமுழுக்கு விழாவின்போது, கருடன் பெரும்பாலும் கலசத்திற்கு மேலே வட்டமடிப்பது வழக்கம். நேற்றும் கருடன் வட்டமிட்டது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *