- செய்திகள்

10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக தகவல் தொழில் நுட்ப-மென்திறன் பயிற்சி சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு…

சென்னை, ஆக.19-
பட்டபடிப்பு இறுதி ஆண்டு படிக்கும் 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக தகவல் தொழிற்நுட்ப-மென்திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மணிகண்டன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
டிஜிட்டல் முகவரி
* மாநிலத்தில் உள்ள அனைத்து முகவரிகளையும் விரைவாகக் கண்டறியும் வகையில் அனைத்து முகவரிகளுக்கும் தரப்படுத்தப்பட்ட டிஜிட்டல் முகவரி உருவாக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்கள் மற்றும் அவற்றின் முகவரிகளை எளிதில் மிகத் துல்லியமாகக் கண்டறிய இந்த அமைப்பு உதவும்.
* தேசிய மக்கள் தொகை பதிவேடு அல்லது ஆதார் அங்கீகாரமுள்ள மின்கையொப்ப பயன்பாடு உருவாக்கப்படும். இதன்மூலம் யு.எஸ்.பி., ஸ்மார்ட் கார்டு இல்லாமலே, அரசின் அனைத்து இணையவழி சேவைகளையும் முழுவதுமாக வழங்க முடியும்.
10 ஆயிரம் மாணவர்களுக்கு
* தமிழ்நாடு ஐ.சி.டி. நிறுவனத்தின் சேவைகளை தமிழக அரசின் 130 அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பெற்றிடும் வகையில் கல்லூரி ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் செலவினத்தில் தமிழ்நாடு ஐ.சி.டி. நிறுவனத்தின் இலவச சந்தாதாரர்களாக இணைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் தமிழ்நாடு ஐ.சி.டி. நிறுவனத்தின் சொந்த தொகுப்பு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும்.
*பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படிக்கும் 10 ஆயிரம்  மாணவர்களுக்கு தமிழ்நாடு ஐ.சி.டி. நிறுவனம்மூலம் இலவசமாக தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்திறன் பயிற்சி வழங்கப்படும். மொத்தம் 150 மணி நேர வகுப்புகளைக்கொண்ட இப்பயிற்சிகளில் கிராமப்புற, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பயிற்சிக்கான செலவினம் முழுவதையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஏற்றுக்கொள்ளும்.
இவ்வாறு அமைச்சர் மணிகண்டன் அறிவித்தார்.

Leave a Reply