- செய்திகள், மாநிலச்செய்திகள்

1 கிலோ வெங்காயம் 7 ரூபாய்தான் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு

புதுடெல்லி, பிப்.13:-
ஆசியா மிகப்பெரிய வெங்காய சந்தையான மகாராஷ்டிராவின் லசால்கான் மொத்த விற்பனை சந்தையில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1 கிலோ வெங்காயம் 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
83 சதவீதம்
நாசிக்கை சேர்ந்த தேசிய தோட்டக்கலை, ஆராய்ச்சி அமைப்பின் இயக்குனர் ஆர்.பி. குப்தா இது குறித்து கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரையிலான காலத்தில் வெங்காயத்தின் விலை 83 சதவீதம்  குறைந்துள்ளது. அந்த மாதத்தில் 43 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை  செய்யப்பட்டது. சந்தைக்கு வரத்து அதிகரித்ததே இதற்கு காரணம். தற்போது மொத்த விற்பனை சந்தையில் வெங்காயம் கிலோவுக்கு குறைந்த அளவாக 4 ரூபாய்க்கும், அதிக பட்சமாக 10 ரூபாய் 50 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தேவையை காட்டிலும் சப்ளை அதிகமாக உள்ளதால் வெங்காயம் விலை குறைந்துள்ளது. தற்போது மொத்த விற்பனை சந்தையில் ஒரு வெங்காயத்தின் விலை 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7 ரூபாயாக குறைந்து விட்டது. வெங்காய உற்பத்தியில் முன்னணியில் உள்ள குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து சப்ளை நிலையாக அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.  வரும் நாட்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெங்காயம் கிலோவுக்கு 2 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இறக்குமதி
கடந்த வேளாண் பருவத்தில் வெங்காய உற்பத்தி குறைந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 80 ரூபாய் வரை உயர்ந்தது. இதனையடுத்து மத்திய அரசு விலை உயர்வை கட்டுபடுத்தவும், சப்ளையை அதிகரிக்கவும் இறக்குமதி நடவடிக்கையில் இறங்கியது. வெங்காயம் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து உள்நாட்டில் வெங்காயத்தின் விலை குறைய தொடங்கியது. இந்நிலையில் கரீப் பருவ வெங்காய உற்பத்தியும் சந்தைக்கு வர தொடங்கியதால் வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது.

Leave a Reply