- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

ேபாக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை பழச்சாறு-மோர் 4 மாதங்களுக்கு வழங்கப்படும்

சென்னை, பிப். 22-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி போக்குவரத்து போலீசாருக்கு எலுமிச்சை பழச்சாறு வழங்கும் திட்டம் நேற்று முதல் தொடங்கியது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–-

சீரான போக்குவரத்து

சட்டம் – ஒழுங்கைப் பராமரித்து, பொது அமைதியை நிலவச் செய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் குற்ற நிகழ்வுகளை தடுத்தல், குற்றங்கள் நிகழும் போது விஞ்ஞான ரீதியான புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனைப் பெற்றுத்தருதல் என பல்வேறு இன்றியமையாப் பணிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம் ஏதுமின்றி பாதுகாப்பு உணர்வுடன் வாழ்வதற்கு காவல் துறையினரின் விழிப்பான பணி பெரிதும் உதவுகிறது. சட்டம் – ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பது மற்றும் குற்ற நிகழ்வுகள் தொடர்பான பணிகள் மட்டுமன்றி போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் சாலையை பயன்படுத்துவோர் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதும் காவல் துறையினரின் பணிகளில் ஒன்றாக உள்ளது.

வெயிலின் தாக்கத்தை

போக்குவரத்துக் காவல் துறையினர் கடும் வெயில் காலங்களிலும், சாலை சந்திப்புகளில் பணி புரிய வேண்டியுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல் துறையினரை பாதுகாக்கும் வகையில், எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் ஒரு புதிய திட்டத்தை முதல்–-அமைச்சர் ஜெயலலிதா 2012–-ம் ஆண்டு அறிவித்தார்.

2012–-ம் ஆண்டு நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, ‘‘போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது காவல் துறை பணிகளில் முக்கியமான ஒன்றாகும். இப்பணியைச் செய்யும் காவல் துறையினர் கோடைக் காலத்தில் கடும் வெயிலில் சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும், நிழலுக்கு ஒதுங்கக் கூட இயலாத இடங்களில் நின்று பணிபுரிய வேண்டியுள்ளது. இவர்கள் பொதுவாக, ஒரு நாளில் காலையில் 4 மணி நேரமும், மதியம் 4 மணி நேரமும், வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் பணி புரிகின்றனர்.

எலுமிச்சம் பழச்சாறு

இவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில், இவர்களுக்கு பணியில் இருக்கும் போது, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை, உள்ள நேரத்தில், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை எலுமிச்சைப் பழச்சாறு வழங்கப்படும். இது கோடை காலத்தில் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரையில் சுமார் 6,500 பேர் இதனால் பயனடைவர்’’. என  முதல்–-அமைச்சர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார்.

இதன்படி போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு கோடை காலத்தில் 4 மாதங்களுக்கு எலுமிச்சை பழச்சாறு வழங்கப்படுகிறது. எலுமிச்சை பழச்சாறு ஒவ்வொரு நாளும் 4 முறை வழங்கப்படுகிறது. எலுமிச்சை பழச்சாறுக்குப் பதிலாக மோர் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறையினரில் சிலர் வேண்டுகோள் விடுத்தனர்.

நேற்று முதல்…

அதனை ஏற்றுக் கொண்ட முதல்-–அமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதம் முதல் ஜுன் வரையிலான நான்கு மாத காலத்திற்கு போக்குவரத்து காவலர்களுக்கு அவரவர் விருப்பப்படி எலுமிச்சை பழச்சாறு அல்லது மோர் வழங்க ஆணையிட்டுள்ளார். இதற்கான அரசாணை 14.12.2015 அன்று வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துக் காவலர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி பணி புரியும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்படும் எலுமிச்சை பழச்சாறு அல்லது மோர் நேற்று முதல் வழங்கும்படி முதல்–-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி நேற்று முதல் போக்குவரத்துக் காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் அவரவர் விருப்பப்படி வழங்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply