- உலகச்செய்திகள், செய்திகள்

ஹிலாரி கிளின்டன் வாக்குறுதி

வாஷிங்டன், ஏப். 27:- அமெரிக்க அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று, ஹிலாரி கிளின்டன் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஜூலையில் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் உட்கட்சி தேர்தலானது நடத்தப்பட்டு வருகிறது. இதில், குடியரசு கட்சியில் தொழிலதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஹிலாரி கிளின்டனும் முன்னணியில் உள்ளனர். இவர்களே கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. வரும் ஜூலை மாதத்தில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஹிலாரி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி தேவை

இந்நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலாந்தல்பியா நகரில், ஹிலாரி கிளின்டன் பேசியதாவது:- எனது பொது வாழ்க்கையில் பெண்களின் மனித உரிமைகளுக்காக நான் பல்வேறு முறை போராடி உள்ளேன். சட்டம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றின் மூலமாக, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதை, அந்த போராட்டங்கள் எனக்கு உணர்த்தின. நான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எனது அமைச்சரவையில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு அளிப்பேன். இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன. பெண்களுக்கு சம உரிமை அளிப்பதை முன்னரே தொடங்கினால்தான், நம்மால் பெருமளவு மாற்றத்தை கொண்டு வர முடியும். நாம் வளர்ந்து விட்டோம்; இருப்பினும் இன்னும் நாம் வளரவேண்டும் என்பதை உணர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பாக்ஸ்

ஜான் போடஸ்டா என்பவர்தான், ஹிலாரியின் பிரசார நிகழ்ச்சிகளை கவனித்து வருகிறார். அவர், அமெரிக்க வாழ் இந்தியரான நீரா டேண்டன், ஹிலாரியின் அமைச்சரவையில் இடம்பெற விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தார். டேண்டனும், ஹிலாரியிடம் 14 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உள்ளார். தற்போது, அமெரிக்க முன்னேற்றத்துக்கான மையம் என்கிற அரசு ஆலோசனை அமைப்பின் தலைவராக உள்ளார் டேண்டன். அந்த அமைப்பை நிறுவியவர் ஜான் போடஸ்டா.

Leave a Reply