- செய்திகள்

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் ஆய்வுமையம் அமைத்திட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கவிஞர் முத்துலிங்கம் கோரிக்கை…

சென்னை, ஆக.17-
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு மையம் அமைக்க முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிஞர் முத்துலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
வருகின்ற 2017-ம் ஆண்டு நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மலர் வெளியீட்டு விழா நடந்தது. விழாவில், திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் விழாவை தொடங்கி வைத்து பேசியபோது கூறியதாவது,
தமிழால் வளர்ந்தவர்கள்
தமிழ், தமிழ் என்று சொல்லித் தமிழால் வளர்ந்தவர்கள் தமிழின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செயல்கள் எதையும் செய்யவில்லை. எம்.ஜி.ஆர். ஒருவர்தான் தமிழை வளர்ப்பதற்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை தஞ்சையில் தோற்றுவித்தார்.
உலகின் சிறந்த மொழி
உலகில் புகழ் பெற்ற பல்கலைக்கழகம் அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம். உலகின் சிறந்த மொழிகளுக்கெல்லாம் ஆய்வு மையம் அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலகில் மிகச் சிறந்த மொழியாகவும், உலகில் தோன்றிய மொழிகளுக்கெல்லாம் முதல் மொழியாகவும் செம்மொழிக்குரிய பதினோரு தகுதிகளையும் பெற்ற மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழிக்கு அங்கே இருக்கை அமைக்கப்படவில்லை.
ரூ. 40 கோடி
ஆய்வு மையம் அங்கே அமைக்க வேண்டுமென்றால் இந்திய ரூபாயில் 40 கோடி நாம் செலுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் மராட்டியத்தைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் 7 கோடி திரட்டி இருக்கிறார்கள். இன்னும் 33 கோடி ரூபாய் கொடுத்தால் தமிழ் இருக்கை அங்கே அமைந்து விடும். எம்.ஜி.ஆர். இன்று இருந்திருந்தால் அரசின் சார்பில் 33 கோடியையும் கொடுத்துத் தமிழுக்குப் பெருமை தேடி கொடுத்திருப்பார்.
நல்லாட்சி
அவர் வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்-அமைச்சர் கவனத்திற்கு யாரேனும் இதைக் கொண்டு சென்றால் நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply