- சினிமா, செய்திகள்

ஹலோ நான் பேய் பேசறேன்

விமர்சனம்
திகில் ஆவிக்கதைகளுக்கு மத்தியில் இது ஜாலியான ஆவிக்கதை.
திருட்டுத் தொழிலை பிழைப்பாக வைத்திருக்கும் அமுதனுக்கு ஆபீசில் வேலை பார்க்கும் கவிதா மீது காதல். சாவுக்குத்துக்கு பயிற்சி கொடுக்கும் கவிதாவின் அண்ணனோ அந்த ஆட்டத்தில் ஜெயித்தால் மட்டுமே கல்யாணம் என்க, அதிலும் ஆடி ஜெயிக்கிறான், அமுதன். இனி திருமணம் தான் என்ற அடுத்த கட்டத்துக்கு காதல் ஜோடி தயாராகும் நேரத்தில் வருகிறது, செல்போன் வழியாக ஒரு ஆவி. அந்த ஆவி அமுதனின் காதலியை பணயக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு உயிரோடிருக்கும் தனது காதலனை அங்கே அழைத்து வரச்சொல்ல…
ஆவிப்பெண்ணின் காதலன் வந்தானா… ஆவியை மீறி அமுதன்-கவிதா திருமணம் நடந்ததா என்பது கலகல திரைக்கதை.
அமுதனாக வைபவ். திருட்டுத் தொழிலை குற்ற உணர்வில்லாமல் செய்யும் அந்த லோக்கல் சென்னை பார்ட்டி கேரக்டரில் அச்சாக பொருந்திப் போகிறார். ஐஸ்வர்யாவுக்கும் இவருக்கும் காதல் வரும் எல்லா இடங்களிலும் ரசனை கொடி கட்டுகிறது. காதலிக்காக தன் திருட்டுத் தொழிலை மாற்றிக் கொள்ளும் இடத்தில் அந்த காதல் மனதை அழகாக வெளிப்படுத்துகிறார். காதலியை அடைய அவள் அண்னிடம் சாவுக்குத்தை ஆவேசமாக ஆடிக்காட்டும் இடத்திலும் நடிப்பில் சிக்சர் விளாசுகிறார். பேய்க்குப் பயந்து பம்மும் இடத்தில் அந்த திகில் கண்கள் தனிஅம்சம்.
கவிதாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்தப் படம் மைல்கல். சாவுக்குத்தில் `சில்லாக்கி டும்மா' பாடலை பாடியபடி இவர் போடும் ஆட்டத்துக்கு தியேட்டரில் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடுகிறார்கள். செல்போன் ஆவிப்பெண் இவருக்குள் புகுந்து கொள்ளும்போது இன்னொரு வித ஐஸ்வர்ய(ா) நடிப்பு.
ஆவிப்பெண்ணாக ஓவியா வருவது கொஞ்ச நேரமே என்றாலும், அவர் வரும் காட்சிகளில் திகிலுடன் ஜாலியும் இணைந்து கொள்கிறது. இவரின் காதலனாக வரும் கருணாகரன் அவர் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்.
படத்தின் முற்பகுதி காமெடியில் சாவுக் குத்தாட்ட மாஸ்டர் வி.டி.வி.கணேஷ், அவர் தம்பி சிங்கப்பூர் தீபன், இந்திப் பாட்டுக்கு கம்போஸ் பண்ணும் யோகிபாபு அணி பங்கு போட்டுக் கொள்கிறார்கள். பிற்பகுதியை கேம் ஆடி பேயை துரத்தும் மந்திரவாதி சிங்கம்புலி குத்தகைக்கு எடுத்துக் கொள்கிறார்.
சித்தார்த் விபின் இசையில் `கோழி குருடா இருந்தாலும்' பாடல் ருசி. `சில்லாக்கி டும்மா' பாடல் தெறி.  பானுமுருகன் ஒளிப்பதிவு கதையோடு இணைந்த அழகு. கிளைமாக்சில் பேய்க்காக தன் கணவனை ஒருநாள் விட்டுக் கொடுக்கும் மதுமிதா கேரக்டரில் நிற்கிறார், டைரக்டர் எஸ்.பாஸ்கர். இந்தி மந்திரவாதிகள் பேயோட்டுவது கூட தனிஅழகு.

Leave a Reply